தஞ்சாவூர்: திருப்புவனம் அஜித் மரணத்தில் மர்ம முடிச்சு! ஜி.கே.வாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
காவல் துறையினுடைய மனிதாபிமான அற்ற செயல்பாடு, காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு, அத்துமீறிய செயல்பாடு காரணமாக காவலாளி அஜித்குமார் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்: திருப்புவனம் அஜித் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு ஒன்று உள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே;.வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ்
தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், சுதாகர் மூப்பனார், பிஎல்.ஏ. சிதம்பரம், என்.ஆர். ரங்கராஜன், என்.ஆர். நடராஜன், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை தற்போது உலுக்கிய ஒரு மிகப்பெரிய வேதனையான பிரச்சனை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்தான். காவல் துறையினுடைய மனிதாபிமான அற்ற செயல்பாடு, காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு, அத்துமீறிய செயல்பாடு காரணமாக காவலாளி அஜித்குமார் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை முதல்வர் வசம்தான் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழக அரசின் பலவீனத்தின் அடிப்படையிலே காவல்துறையினர் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. இதன் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கும் தமிழகத்திலே படிப்படியாக கடைசி புள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.
அவிழ்க்க முடியாத முடிச்சு?
குற்றவாளியா? இல்லையா? என்று தெரியாமலேயே எப்.ஐ.ஆர் கூட போடாமலேயே ஒருவரை சந்தேகத்தின் பேரிலே அடித்து துன்புறுத்தி மரணத்திற்கு கொண்டு செல்வது என்பது மிகுந்த வேதனைக்கும், வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே, ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது. முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் போன்றவை இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நடைபெற அடித்தளம் போதைப்பொருள் தான் என தெரிவித்தார்.
நம்பிக்கைக்கு உரிய கூட்டணி
இதன் நடமாட்டத்தை தடுக்க முடியாத தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசினுடைய தவறுகளை , விரோத போக்கை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற தேர்தலிலே ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே பாடம் புகட்டுவார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மக்கள் மீது வரி சுமத்துவது தி.மு.க. அரசின் வழக்கமாகிவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது.
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தலைவராக உள்ளார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்பட கூறியுள்ளார். மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். எதிர்மறை வாக்கு தமிழகத்திலே நாளுக்கு நாள் அனைத்து துறையிலும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது .எனவே தமிழகத்தினுடைய வெற்றி அணியாக முதல் அணியாக செயல்பட தொடங்கி இருக்கிற அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன என தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கலந்து கொள்ளும்
நாளை முதல் கோவை மண்டலத்திலிருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளார். அவரது சுற்று பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும் என தெரிவித்தார்.




















