இந்திய கம்யூ. சார்பில் தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடந்த 23ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தை திரும்பப் பெறுவது, கருத்துச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பிட, கட்சி தலைமை அறிவிக்கப்பட்டதையொட்டி இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி, மூன்று ரோடு சந்திப்பில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தவத்திரு விசிறி சாமியார் முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மக்கள் பாராளுமன்றத்தின் சபாநாயகராக வங்கி ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. வேளாண்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் வேளாண் சட்ட முன்வடிவை முன்மொழிந்து உரையாற்றினார். வேளாண் துறை இணையமைச்சர் பீர்முகமது சட்ட முன்வடிவை வழிமொழிந்து பேசினார்.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் இந்த சட்டங்களின் பாதிப்புகளை ஆதாரத்துடன் விளக்கி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றத்தில் பேசினார். அதனை தொடர்ந்து திமுக விவசாய சங்க பிரிவு செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜீவகுமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, தொழிற்சங்க தலைவர் வெ.சேவையா ஆகிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்து விளக்கி பேசினார். மூன்று வேளாண் சட்டங்களையும், புதிய மின்சார சட்டத்தையும் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மான நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார் , மாவட்ட குழு உறுப்பினர் முத்துக் குமரன், ஒன்றிய பொறுப்பு செயலாளர் ராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் , மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இறுதியாக தேசிய கீதம் இசைக்க மக்கள் நாடாளுமன்ற நிறைவுபெற்றது.