மார்கழி மாதம் இன்று பிறந்தது... இந்த மாதத்தில் செய்யக்கூடாத சில பணிகள் எது தெரியுமா?
மார்கழி மாதத்தில் சூரியன் பயணிக்க துவங்கும் தனுசு ராசி, குரு பகவானின் ஆட்சி வீடாகும். மங்களகாரகன் என சொல்லப்படும் குருவின் வீட்டில் சூரியன் நுழையும் போது சூரியனின் பலம், ஆற்றல் குறைந்து காணப்படும்.

தஞ்சாவூர்: இன்று மார்கழி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் சில பணிகளை செய்யக்கூடாது என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி எந்த காரியங்களை தெரியாம கூடாது என்பது தெரியுங்களா? தெரிஞ்சுக்கோங்க.
மார்கழி மாதம் இன்று டிசம்பர் 16ம் தேதியன்று காலை 4.27 மணிக்கு பிறந்துள்ளது. மார்கழி மாதத்தில் திருமணம், வளைகாப்பு, புதிய தொழில் துவங்குவது, புதிய வீட்டிற்கு குடிபோவது உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய மாட்டார்கள். இவற்றை தவிர்த்து, தெய்வ வழிபாட்டிலும், விரதம் போன்ற ஆன்மீக பணிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழிமுறையாகும்.
அதாவது, மார்கழி மாதத்தில் சூரியன் பயணிக்க துவங்கும் தனுசு ராசி, குரு பகவானின் ஆட்சி வீடாகும். மங்களகாரகன் என சொல்லப்படும் குருவின் வீட்டில் சூரியன் நுழையும் போது சூரியனின் பலம், ஆற்றல் குறைந்து காணப்படும். குருவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். திருமணம், தொழில் ஆகியவற்றிற்கு காரணமான குரு தொடர்பான சுப காரியங்களை செய்யக் கூடாது என்கிறார்கள். குறிப்பாக மூன்று காரியங்களை மட்டும் மார்கழி மாதத்தில் செய்யவே கூடாது. அப்படி செய்வதால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவை பாதிக்கப்படுவதுடன், மனஅழுத்தம், நோய், பொருளாதார நெருக்கடி ஆகியவையும் அதிகரிக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
புது வீடு குடியேறுவதுடன், வீடு கட்டும் பணிகளை மார்கழியில் துவங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படுவதுடன் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதேபோல் வீட்டில் புதிதாக சாமி சிலைகள் வாங்கி வந்து வைப்பதையும் மார்கழி மாதத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மார்கழி மாதத்தில் புதிய தொழில்கள் துவங்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அப்படி துவங்குவதால் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்படும்.
தெய்வீக மாதமான மார்கழி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது தீமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சூரியன் பலவீனமாக இருக்கும் காலம் என்பதால் இந்த மாதத்தில் செய்யும் செயல்கள் நீண்ட நாள் பலனை தராது. புதிய வாகனங்கள், நிலம், தங்கம் அல்லது வெள்ளி போன்ற மங்கள பொருட்கள் வாங்குவதற்கும் மார்கழி மாதம் ஏற்றதல்ல.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோயிலுக்கு சென்றாலே ஆண்டு முழுவதும் கோயிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். அனைத்து கஷ்டங்களும் நீங்கி, தை மாதத்திலிருந்து இருந்து புது வாழ்வு கிடைக்க இம்மாதத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் எழுந்து குளித்து குழுவாக இணைந்து பஜனை பாடல்களை பாடிக் கொண்டி முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவார்கள். இந்த அதிகாலை பஜனை பாடல்கள் பாடி வீதி வலம் வருவது தொன்று தொட்டு நடந்து வரும் ஆன்மீக நிகழ்வாகும். மேலும் பெண்கள் மார்காழி மாதம் முழுவதும் வீட்டில் பெரிய அளவில் வண்ணமயமான கோலங்கை போடுவார்கள்.





















