தமிழனின் அந்த காலத்து ப்ரிட்ஜ் ஈயப்பாத்திரம் - நலிவடையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்...!
ப்ரிட்ஜ் இல்லாத காலங்களில் புளிக்கும் பொருட்களை ஈயப்பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தி வந்தனர்
கும்பகோணம் என்பது கோயில் நகரமாகும். கும்பகோணம் வெற்றிலை, நெய்சீவல், பித்தளை பாத்திரங்கள், ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோயில் குத்து விளக்கு, உலக புகழ்பெற்ற மகாமககுளம், கல் நாதஸ்வரம், நாதஸ்வரம் தயாரிப்பு, வாழை இலை தொன்னை, கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரஹ கோயில்கள், மற்றும் சோழர் காலத்து ஊர்கள் என பெயர் பெற்றதாகும். இங்கு சுற்றுலாகவோ அல்லது கோயில்களுக்கு தரிசனம் செய்வதற்காக வருபவர்கள், கண்டிப்பாக கும்பகோணத்தில் ஏதேனும் ஒரு பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாகும். அந்த வகையில், கும்பகோணத்தில் தயாரிக்கும் ஈயப்பாத்திரத்தை ஒரு காலத்தில் பெரும்பாலானோர் வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது ஈய்பாத்திரத்தை பற்றி விபரம் அறிந்தவர்கள் மட்டும் வாங்கி செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற ஈயப்பாத்திரம் உடல் ஆரோக்கியத்துடனும், திடமாகவும் இருப்பதற்கான உணவு பாத்திரம்.
கும்பகோணத்தை தாயகம் கொண்டுள்ள ஈயப்பாத்திரத்தில் வைத்துள்ள உணவுகளால் உடல் ஆரோக்கியத்துடனும், திடமாகவும் இருக்கும். கும்பகோணத்தில் ஈயப்பாத்திர தொழிலில் தற்போது 3 குடும்பங்கள் மட்டும் தான் உள்ளது. இந்த தொழிலில் கடந்த சில வருடங்கள் உற்பத்தி செய்பவா்கள் குறைந்து விட்டதால், தயார் செய்வது குறைந்துள்ளது. கும்பகோணத்தில் 30 ஈயப்பாத்திர கடைகள் இருந்தன ஆனால் தற்போது வெறும் 3 கடைகள் மட்டும் தான் உள்ளது. ஈயப்பாத்திரத்தை பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பாத்திரத்தில் மோர் மற்றும் ரசம் உணவுகளை மட்டும்தான் வைத்து கொள்ள வேண்டும். இதனால் அந்த பொருட்கள் புளிக்காமல் அப்படியே கெட்டு போகாமல் இருக்கும். ஈயப்பாத்திரத்தில் உணவுகளை வைத்து உபயோகித்தால் உடல் ஆரோக்கியத்துடனும், திடமாகவும் இருக்கும். மேலும் சுவாசகோளாறு உள்ளவா்கள், குரல் வளமாக இருப்பதற்காகவும் பயன்படுத்துவார்கள்.
ஈயம் மற்றும் வெளிப்பூச்சாக ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் உணவு சமைக்கும்போது வாசனை மிகுந்து இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். முன்னோர் காலத்தில் இட்லி மாவு வைத்து கொள்வார்கள். இதனால் மாவு புளிக்காமல் பிரிட்ஜில் வைத்து போல் இருக்கும், முன்பெல்லாம் பிரிட்ஜ் இல்லாத காலங்களில் புளிக்கும் பொருட்களை ஈயப்பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தி வந்தனர்.
ஈயத்தை பாத்திரங்களில் பூசுதல் என்பது பழங்காலத்திலுள்ள பழக்கமாகும். அன்றாடம் உபயோகப்படும் செம்பு, பித்தளை, வெண்கல் பாத்திரங்களில் புளி சோ்த்து சமைத்து பொருட்களை வைத்தால் சில நாழிகையில் பச்சை நிறமாறி களிம்பு ஏறி உணவு பொருள் விஷமாகிவிடும். இது போல் ஆகி விடக்கூடாது என்பதற்காக ஈயத்தை பூசுவார்கள். உணவு வகையில் முக்கிய அங்கமாக இருந்த ஈயப்பாத்திர தொழில் தற்போது போதுமான வருமானம் இல்லாமையாலும், செய்வதற்கு ஆட்கள் இல்லாததாலும் நலிந்து வருகின்றது.
இது குறித்து ஈயப்பாத்திர தொழில் செய்யும் மோகன் கூறுகையில், ஈயப்பாத்திரம் உருவானது கும்பகோணத்தில் தான். கும்பகோணம் எப்படி காபி, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களுக்கு பெயா் பெற்றதோ அதே போல் ஈயப்பாத்திரம் கும்பகோணம் தான் பெயா் பெற்றதாகும். காலப்போக்கில் தொழில் நலிந்து விட்டதால் யாரும் கண்டு கொள்வதில்லை. இரண்டு விதமான ஈயம் உண்டு, முதலாவது காரீயம் இதில் பென்சில், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்வார்கள். இந்த காரீயத்தில் எந்த விதமான பயனும் கிடையாது. இரண்டாவது வெள்ளீயியம் இதில் தான் பாத்திரம் மூலாம் பூசுவது, பாத்திரங்கள் செய்வதாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் 150 குடும்பங்கள் ஈயப்பாத்திர தொழில் செய்து வந்தோம். ஆனால் அவா்கள் வருங்கால சந்ததியினருக்கு கற்று கொடுக்காமலும், எப்படி செய்ய வேண்டும் கூறாமல் விட்டு விட்டதால், யாரும் செய்வதற்கு ஆர்வம் காட்ட வில்லை. மேலும் இந்த பாத்திரம் செய்வது என்பது மண்பாண்டத்தை எப்படி ஈரமண்ணாக இருக்கும் போது லாவகமாக செய்வார்களோ அதே போல் ஈயப்பாத்திரத்தை மரக்கட்டையில் வைத்து அடித்து அடித்து வடிவம் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பிசிறு அடித்தால் பாத்திரம் முழுவதும் வீணாகி விடும். அதன் பிறகு மறுபடியும் புதியதாக செய்ய வேண்டும்.
உபயோகப்படுத்தப்பட்ட ஈய்ப்பாத்திரம் கொண்டு வந்து எடைக்கு எடை போட்டு விட்டு அதே எடையில் உள்ள பாத்திரத்தை எடுத்து செல்வார்கள். செய் கூலி தனியாக தந்து விடுவார்கள். 300 கிராம் முதல் 1 கிலோ எடையுள்ள பாத்திரம் செய்ய்பட்டு வருகிறது. ஈயத்தினால் ரசம் சொம்பு, அடுக்கு, கிண்ணம், உருளி, வெண்ணைதாழி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. முன்பெல்லாமல் தட்டு, கரண்டி, ஜாடி உள்ளிட்ட பொருட்கள் செய்தனர். ஆனால் தயார் செய்யும் ஆட்கள் இல்லாததால் இப்போது யாரும் செய்வதில்லை. அனைவரும் வேறு தொழில் செய்ய தொடங்கி விட்டனா்.
தினந்தோறும் ஒரு நாளைக்கு 4 பாத்திரங்கள் வரை செய்யலாம். முன்பெல்லாம் உடல் ஆரோக்கியத்துடனும், திடத்துடனும் இருந்தார்கள். ஆனால் தற்போது போதுமான உடல் தெம்பு இல்லாததால் , ஈயப்பாத்திரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஈயப்பாத்திரத்தை மரக்கட்டையால் அடித்து அடித்து வடிவம் கொடுப்பது என்பது மிகவும் சிரமமான வேலையாகும். ஈயம் பூசும் தொழிலும், தயாரிக்கும் தொழிலும் அழிந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீடுகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் என அனைத்திலும், பித்தளை, செம்பு பாத்திரங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் ஈயத்தை பூசி பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு கேடுவிளைவிக்கும் பாத்திரங்களில் சமைக்கின்றனர்.
சுமார் 50 வருடங்களாக அரசு கூட்டுறவு துறையின் மூலம் ஈயப்பாத்திர மையம் இயங்கி வந்தது. ஆனால் தொழிலாளா்களின் ஒத்துழைப்பு இல்லாததால், சில நாட்களிலேயே நலிவுற்று மூடு விழா நடத்தப்பட்டு விட்டன. இதே நிலை நீடித்தால் ஈயப்பாத்திர தொழில் வரும் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய் விடும். எனவே தமிழக அரசு ஈயப்பாத்திர தொழில் செய்வதற்கு போதுமான நிதியையும், தேவையான உபகரணங்களையும் வழங்கி ஊக்க விக்க வேண்டும். இதற்காக தொழிற் மையத்தில் தயாரிக்கும் முறையை பற்றி பாடத்திட்டங்களை கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்காலத்து உணவுகள், தானியங்கள், இசை கருவிகள், பித்தளை குத்து விளக்கு, மணப்பாறை முருக்கு உள்ளிட்ட காப்புரிமையை வழங்குவதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வந்தாலும், கும்பகோணத்திற்கு பெயா் பெற்ற ஈயப்பாத்திரத்தை மட்டும் மறந்ததார்கள் என்று தெரியவில்லை.