’கஜா புயலுக்கு செலவழித்த 1.60 கோடியை அரசு திருப்பி தரவில்லை’- பேராவூரணி ஒன்றிய கவுன்சிலர் வேதனை
’’கஜா புயலுக்கு ஒன்றியத்திலிருந்து பொது நிதியை செலவழித்த வகையில், அரசிடமிருந்து 59 லட்சம் மட்டுமே வந்துள்ளது. 1.60 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை’’
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், ஆவணம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல் வரவேற்றார். திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் போது அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வதில்லை. அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டங்களில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தர, வந்திருக்கும், பெரும்பாலான அரசு அதிகாரிகள் முன் வருவதில்லை. ஒன்றிய கூட்டங்களை புறக்கணிக்கின்றார்களா என்று தெரிய வில்லை. இந்தப்போக்கு ஏற்கத்தக்கதல்ல என்றார்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குணாநிதி ஆல்பர்ட், பாக்கியம் முத்துவேல், ராஜலட்சுமி ராஜா, பெரியநாயகி ஆகியோர் பேசுகையில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், எம்-சாண்ட் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் தரமற்றதாக இருப்பதால், அரசு கட்டிடப் பணிகளுக்கு, ஆற்று மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒட்டங்காடு பகுதியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஒட்டங்காடு கடைவீதியில் சிசிடிவி வசதி செய்ய வேண்டும். வெறிநாய் தொந்தரவு இருப்பதால் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளுக்குள் மழை வெள்ளம் வருவதை தடுக்கும் விதமாக, வருமுன் காப்போம் என்ற வகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இறுதியாக அதிமுக ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பேசுகையில்," பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு ஒன்றியக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியாத வகையில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. கஜா புயலுக்கு ஒன்றியத்திலிருந்து பொது நிதியை செலவழித்த வகையில், அரசிடமிருந்து 59 லட்சம் மட்டுமே வந்துள்ளது. 1.60 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. 6 ஆவது மாநில நிதிக்குழு இணையதள கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்திப் பேசினேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
தற்போது பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் நலிவுற்ற ஊராட்சியாக இருக்கிறது. நலத்திட்டங்களை நிறைவேற்ற, இதனை நலிவுற்ற ஊராட்சியாக அறிவித்து, சிறப்பு நிதி ஒதுக்க மாவட்ட நிர்வாகம், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார். இறுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரியை தவிர மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.