ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
செல்போன் பேசியபடி வந்ததால் கடுப்பான மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், பொறியாளர் ஆனந்தியை முன்னால் வர சொல்லி அவரது செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்டித்தார்.
தஞ்சாவூர்: தஞ்சையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் செல்போன் பேசியபடி பெண் பொறியாளர் வந்தார். இதனால் கடுப்பான மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், பொறியாளர் ஆனந்தியை முன்னால் வர சொல்லி அவரது செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்டித்தார்.
டபீர்குளம் பகுதியில் ஆய்வுப்பணி
தஞ்சை டபீர்குளம் ரோடு வார்டு 11 பகுதியில் மாநகராட்சி பள்ளிகள் இருந்து அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் தண்ணீர் தொட்டி தூய்மையாக இருக்கின்றதா பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா மின் விளக்குகள், மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
செல்போன் பேசிக் கொண்டு இருந்ததால் கடுப்பானார்
ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சொல்லி அதனை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தபடியே வந்தார். அப்போது பொறியாளர் ஆனந்தி என்பவர் செல்போன் பேசிக் கொண்டே வந்தார். மேயர் சண்.ராமநாதன் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் பின்னால் அந்த பெண் பொறியாளரை திரும்பிப் பார்த்த மேயர் அவர் தொடர்ந்து செல்போன் பேசியபடியே இருந்ததால் கடுப்பானார். முன்னாடி வாங்கம்மா என்று அவரை அழைத்து அவரது செல்போனை பிடுங்கி ஆப் செய்து தனது பாக்கெட்டிற்குள் வைத்தார்.
அதிகாரிக்கு டோஸ் விட்டு செல்போனை பறித்தார்
மேலும் அந்த அதிகாரியை கூப்பிட்ட மேயர் பணியின் போது செல்போன் பேசக்கூடாது எனவும் பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைகளை குறிப்பெடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் அந்த வார்டில் என்னனென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று கேட்டு அறிந்தார். மேயர் சண்.ராமநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மக்கள் குறைகளை ஆய்வு செய்யும் போது கவனம் தேவை
சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடைப்பணிகள், குப்பைகள் சேகரிப்பு, குடிநீர் பிரச்சினை என்று அடிக்கடி வார்டுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்வது, மக்கள் கூறும் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது என்று எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கூலாக ஹேண்டில் செய்து வருவார். ஆனால் இன்று பிரச்சினைகளை குறிப்பெடுங்கள் என்று அதிகாரியிடம் கூறியும் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால் மேயர் சண்.ராமநாதன் கடுப்பாகி விட்டார்.
அதனால்தான் அந்த செல்போனை பிடுங்கி ஆப் செய்து தன்னிடமே வைத்துக் கொண்டு விட்டார். மக்கள் குறைகளை தீர்க்க ஆய்வு செய்யும் போது எதற்காக போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் எப்படி மக்கள் கூறும் குறைகளை சரி செய்ய முடியும் என்று நினைத்ததால்தான் மேயர் இப்படி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் என்று மாநகராட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டனர்.