கோயில்களில் குவிந்த பக்தர்கள்... ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு
மாலை வரை தஞ்சை மாவட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறையவே இல்லை. குறிப்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் அதிகளவில் பெண்கள் பக்தர்கள் வருகை புரிந்தனர்.
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கோயில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் கடந்த வாரத்தில் குடும்பத்தோடு தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று காலை முதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு போலீசார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதே போல் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், கரந்தை கோடியம்மன் கோயில், பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதேபோல் கும்பகோணத்தில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பிற மாவட்டம், மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களிலும் வழிபாடு நடத்தினர். மேலும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு மாலை அணிந்தவர்கள் என ஏராளமானோர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
மாலை வரை தஞ்சை மாவட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறையவே இல்லை. குறிப்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் அதிகளவில் பெண்கள் பக்தர்கள் வருகை புரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய வளாகத்தில் புத்தாண்டை பிறப்பை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை அறிவித்ததும், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.