ஐ.டி. வேலைக்கு டாட்டா... மனசுக்கு பிடித்த இயற்கை விவசாயத்தில் அட்டகாச வருமானம்: கலக்கும் தஞ்சை இளம் விவசாயி
ஐ.டி.யில் வேலைபார்க்கும் போது மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம். இப்போ அதை தாண்டி செலவுகள் போக 3 மடங்கு அதிகம் வருமானம். அடுத்ததாக காய்கறிகள் சாகுபடி செய்யணும்.
தஞ்சாவூர்: ஆயிரக்கணக்கில் மாத சம்பளம் பெற்ற ஐ.டி. வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கிய தஞ்சை வாலிபர் அசத்தல் வருமானம் எடுப்பது மட்டுமின்றி மனநிறைவாக நம் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார் தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன்.
அவரை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: சென்னையில் ஐடி துறையில் 12 ஆண்டுகள் வேலை பார்த்தேன். மாதம் ரூ. 80 ஆயிரம் வருமானம். இருந்தாலும் மனதில் மகிழ்ச்சி இல்லை. வருமானம் அதிகமாக கிடைத்தாலும் ஏதோ நிறைவில்லாத மனதுடன் வேலை பார்த்து வந்தேன். அப்பா விவசாயி. இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். சொந்த ஊரில் இருந்து முன்னேறணும் என்ற எண்ணம் தான் நிலைத்து இருந்தது. அப்பா ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தார். ஆனால் எனக்கோ இயற்கை வழி விவசாயம்தான் பிடித்தது. அப்பா திடீரென்று மாரடைப்பால் இறந்தார். அந்த சோகம் ஒருபக்கம் ஐடி வேலையால் ஏற்பட்டு வந்த மன உளைச்சல் மற்றும் உடல் நலப் பாதிப்பு மறுபக்கம்.
ஐடி வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயம்
அப்போதுதான் கொரோனா காலகட்டம். லாக்டவுன். வீட்டிலிருந்தே வேலை என்ற நிலையில் தஞ்சாவூருக்கு குடும்பத்தோடு வந்தேன். நிறைவான மனநிலை ஏற்படணும்ன்னா இயற்கை விவசாயம் செய்து நம்மால் முடிந்தவரை நல்ல பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அம்மா பானுமதியிடமும், என் மனைவி பிரியங்காவிடமும் ஐ.டி.வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்ய போறேன் என்று சொன்னேன். வருஷத்துக்கு ரூ. 12 லட்சம் கிடைத்து வந்த வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை நம்பி பெரும் நம்பிக்கையோடு இறங்குகிறேன் என்று சொன்னேன்.
மனசுக்கு மகிழ்ச்சி கொடுத்த இயற்கை விவசாயம்
என் அம்மாவும், மனைவியும் எவ்வித தடையும் இன்றி ஓகே சொன்னாங்க. எங்களுக்கு சொந்தமான 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்வதுன்னு முடிவு செஞ்சாச்சு. அதுக்கு முன்னாடியே வயலை எப்படி இயற்கை விவசாயத்திற்கு தகுந்தது போல் மாற்றுவது என்று பலரிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தேன். இதனால் முழுக்க முழுக்க மாட்டுச்சாண எருவை மட்டும் வயலில் இட்டு விவசாயத்தை செய்யணும்னு முடிவு செய்தேன். இரண்டு முறை உழவு செய்த பின்னர் எருவை கொட்டி மீண்டும் ஒருமுறை உழுவு மேற்கொண்டேன். தொடர்ந்து நம் பாரம்பரிய மிக்க ரகங்களான பூங்கார், அறுபத்துக்குறுவை, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஸ்வர்ணமசூரி, சீரக சம்பா, காட்டுயானம், தூயமல்லி, சிவன் சம்பா என்று அனைத்து ரகங்களின் சாகுபடி காலத்தை தெரிந்து கொண்டு களம் இறங்கினேன். நான் முப்போகம் சாகுபடி செய்ய விரும்பலை. 2 போகம் போதும். ஒரு போகம் பச்சைப்பயறு, உளுந்து சாகுபடி செய்வது என்று திட்டவட்டமாக இருந்தேன். அதன்படி குறுவை, சம்பா மட்டுமே இதுநாள் வரை செய்து வருகிறேன். 4 ஏக்கரிலும் நான்கு வகையான ரகங்கள் சாகுபடி செய்தேன். முதல் இரண்டு வருடங்கள் வருமானம் குறைவுதான். ஆனால் அதற்குள் என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தினர் என இயற்கை முறையில் எங்கள் வயலில் விளைந்த நெல்லை அரைத்து அரிசியாக்கி கொடுத்தோம்.
2 வருடம்தான் இயற்கை எரு அடித்தேன்
சாப்பிட்டவர்கள் மனம் திறந்து பாராட்டியதே பெரிய பொக்கிஷம் கிடைத்தது போன்று இருந்தது. முக்கியமாக என் அம்மா பானுமதிக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவங்களுக்கு பூங்கார் மற்றும் கருப்பு கவுனி ரக அரிசியை உணவாக கொடுத்து வந்ததில் யாராலும் நம்ப முடியாத அளவிற்கு தற்போது அவர்களுக்கு சர்க்கரை அளவு இயல்பாகி உள்ளது. முதல் 2 வருடம் மட்டும்தான் சாண எரு அடித்து வயலை உழுதேன். சாகுபடியின் போது பஞ்சகவ்யா, மீன் அமிலம் என்று இயற்கை முறையில் பயிர்களுக்கு இட்டேன். அதற்கு பிறகு நாற்று நடுதல், களை பறித்தல் மட்டுமே எவ்வித இயற்கை உரமும் இடவில்லை. இப்போ ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அருமையான வருமானம். ஐ.டி.யில் வேலை பார்த்ததை விட இப்போ கூடுதலாக சம்பாதிக்கிறேன்.
மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல்
நான் சாகுபடி செய்யற அனைத்து ரகங்களையும் மதிப்புக்கூட்டி அரிசியாக்கி சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்கிறேன். தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் இருந்தும் இப்போ எனக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். மனசு முழுக்க சந்தோசம் பொங்கி வழியுது. வருமானத்திற்கும் இரண்டு மடங்குதான். இப்போ மேலும் 6 ஏக்கரை குத்தகை எடுத்து சாகுபடி செய்கிறேன். இரண்டு போகம் நெல் சாகுபடின்னா, அடுத்தது பச்சை பயறு, உளுந்து சாகுபடி செய்யறேன். இதுவும் இயற்கை முறைதான். சுத்தமான, உயர்ந்த தரமான பொருட்களுக்கு நம் மக்கள் எப்போதும் ஆதரவு தருவாங்க.
மனதும் நிறைகிறது... மணிபர்சும் நிறைகிறது
இப்படிப்பட்ட ரகங்களை நாமும் உண்டு நஞ்சில்லா வாழ்வை வாழ வேண்டும் என்பதே என் நோக்கம் சாகுபடி செய்யப்படும் பல்வேறு ரக நெல் மற்றும் உளுந்து பயிர்களை அரிசியாகவும், உளுந்தாகவும் மற்றும் அதனை மதிப்புக் கூட்டி அவல் மற்றும் பச்சை பயிராகவும் விற்பனை செய்கிறேன். இப்போ எனக்கு நானே முதலாளி, தொழிலாளி. ஐ.டி. துறையில் இருக்கும் போது எதையும் விருப்பப்பட்டு செய்யமுடியாது. எனக்கு போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வம். இப்போ அதையும் எந்த இடையூறும் இன்றி என்னால் எந்த நேரத்திலும் செய்ய முடிகிறது. இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. மனநிறைவோடு மணி பர்ஸ்-ம் நிறைகிறது. ஐ.டி.யில் வேலைபார்க்கும் போது மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம். இப்போ அதை தாண்டி செலவுகள் போக 3 மடங்கு அதிகம் வருமானம். அடுத்ததாக காய்கறிகள் சாகுபடி செய்யணும். உரலில் நெல்லை குத்தி கைக்குத்தல் அரிசியை விற்பனை செய்யணும் என்று எதிர்கால திட்டங்கள் பற்றி பெருமிதத்தோடு தனது மகள்கள் மிருணாளினி, ஷிவானியை மகிழ்ச்சியுடன் அணைத்தபடியே தெரிவித்தார்.
பூங்கார் ரகம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது
தனது விவசாய கணவர் விக்னேஸ்வரன் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் பிரியங்கா கூறுகையில், நம் பாரம்பரிய ரக அரிசிகள் மிகவும் மருத்துவக்குணம் கொண்டவை. அதிலும் பூங்கார் ரகம் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உறுதுணையாக நிற்கிறது. அதற்கு நானே உதாரணம். எனக்கு 2வது பிரசவம் முடிந்த பின்னர் பிரீயட்ஸ் நாட்களில் சோர்வே ஏற்பட்டதில்லை. அதற்கு முன்பு ரொம்ப சோர்வு ஏற்பட்டு வேதனைப்பட்டு இருக்கிறேன். இப்போ நாங்க சாகுபடி செய்ற ரக அரிசிதான் எல்லோரும் சாப்பிடறோம். இப்போ என் ஹெல்த் அந்தளவிற்கு உயர்ந்து இருக்கு. இதை சொல்ல நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். நம் முன்னோர்களின் உடல் வலிமை மற்றும் மனவலிமைக்கு அவர்களின் உணவுதான் காரணம் என்பதற்காகவே இதை சொல்கிறேன் என்றார்.