தஞ்சை மாணவி தற்கொலை : மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்
’’தஞ்சாவூர் நீதித்துறை மூன்றாம் எண் நடுவர் பாரதி முன்னிலையில் பெற்றோர் இருவரும் தனித்தனியாக ஆஜராகி தங்களது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்’’
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த 17 வயது ப்ளஸ் 2 மாணவி, கடந்த 9 ஆம் தேதி பூச்சிக் கொல்லி மருந்து குடித்தார். சிகிச்சையில் இருந்த போது 19ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். தன் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, மகளின் உடலை பெற முடியாது என மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை தனது மகளை மதம் மாறும்படி கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி, பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் பெற்றோரின் வாக்குமூலத்தை பதிவு செய்து அதனை மூடி சீலிடப்பட்ட கவரில் ஒப்படைக்க வேண்டும் என உத்திரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று மாணவின் தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோர் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் நீதிமன்றத்துக்குள் சென்றதும் நுழைவு வாயில் மூடப்பட்டது. வழக்கறிஞர்கள், போலீஸார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து தஞ்சாவூர் நீதித்துறை மூன்றாம் எண் நடுவர் பாரதி முன்னிலையில் பெற்றோர் இருவரும் தனித்தனியாக ஆஜராகி தங்களது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். முற்பகல் 11.55 மணிக்கு தொடங்கிய ரகசிய வாக்குமூலம், மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குமூலம் பதிவு செய்யும் போது வீடியோவில் அந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோர் வெளியே வந்ததும், அவர்களை அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் அய்யப்பன் தலைமையில் வந்திருந்த10 பேர் காரில் அழைத்துச் சென்றனர். பதிவான வாக்குமூலம் 24-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையின்போது ஒப்படைக்கப்படவுள்ளது