வாண்டையார் பாஜகவில் இணைகிறாரா?; அண்ணாமலையுடன் சந்திப்பு - நடந்தது என்ன?
திருவையாறு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் என்னை சந்திக்க வருவதாக தற்போது தான் தகவல் கிடைத்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை பிரச்சாரத்திற்காக வந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் பாஜகவில் இணையப்போவதாக இன்று மாலை பரபரப்பு தகவல்கள் பரவின.
இதையடுத்து கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.
முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்து சால்வை அணிவித்தார். இதனால் தகவல் உண்மை என மிக வேகமாக செய்திகள் பரவிய நிலையில் திருவையாறு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்திக்க உள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில், தனது வீட்டிற்கு முன் குவிந்த பத்திரிகையாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில், எங்கள் இரு தரப்பினருக்கும் பொதுவான நண்பர்கள் உள்ளனர். தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் சந்திக்க வருவதாக தகவல் கிடைத்தது. தேர்தல் நேரத்தில் வதந்திகள் பரவும் என்பதால் வேண்டாம் என்று தெரிவித்தேன். இருப்பினும் பொதுவான நண்பர்கள் மூலம் வேட்பாளர் சந்திக்க வந்தார். இதற்கிடையில் திருவையாறு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் என்னை சந்திக்க வருவதாக தற்போது தான் தகவல் கிடைத்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எந்த யூகங்களுக்கும் இடமில்லை. அவ்வாறு எந்த தகவல் இருந்தாலும் நானே பத்திரிகையாளர்களை அழைத்து தெரிவித்திருப்பேன் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த அண்ணாமலையை கிருஷ்ணசாமி வாண்டையார் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர்.
கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்த பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ”பாரம்பரிய மிக்க குடும்பத்தினர் இவர்கள். மரியாதை நிமித்தமாக தான் சந்திக்க வந்தோம். எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது” என்றார்.