தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் கடைகளை ஏலம் விடுவதில் குளறுபடி? - ஏலத்தை புறக்கணித்த வணிகர்கள்
’’அதிக விலைக்கு ஏலம் விடப்படுவதால் லாபம் பார்க்க முடியாது என வியாபரிகள் தரப்பில் கூறப்படுகிறது’’
ஆங்கிலேர் காலத்தில் தஞ்சாவூர் நகராட்சி 1872-1973 ஆம் ஆண்டுகளில் இரண்டு மார்கெட்டுக்களை கட்டியது. 5 ஆயிரம் மதிப்பில் கோட்டைக்கு உள்ள சதுர வடிவில் ஒரு மார்கெட்டும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் பெரியக்கோட்டை அகழியை ஒட்டி கீழவாசல் அருகே மற்றொரு மார்கெட்டும் அமைக்கப்பட்டது. தற்போது கீழவாசல், சரபோஜி மார்கெட் என்றும், மற்றொன்று காமராஜர் மார்கெட் என்று பெயர் உள்ளது. இதில் சரபோஜி மார்கெட் இடிக்கப்பட்டு, தற்போது புதியதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று. இதற்காக 1289 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இந்த நிதியின் கீழ் பாரம்பரியமான தஞ்சாவூர் நகரை மேலும் அழகு படுத்தும் வகையில் கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்பு பணிகள், காய்கறி சந்தைகள் சீரமைப்பு, மணிகூண்டு சீரமைப்பு, பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்புறங்களில் தெருக்கள் மேம்பாடு, புராதன சின்னங்கள் பழமை மாறாமல் சீரமைப்பது என 90 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் 16 திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் கீழவாசல், சரபோஜி மார்கெட்டில் இயங்கி வந்த 350 கடைகளை முழுவதுமாக இடித்து, தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 308 கடை கட்டப்பட்டுள்ளன. அக்கடைகளில் ஏலம் நடைபெற்றது. 22 ந்தேதி வணிகர்கள், தங்களது ஒப்பந்த புள்ளி விபரங்களை போடுவதற்காக சீல் வைக்கப்பட்ட பெட்டியை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்திருந்தனர். பின்னர் காலை 11.30 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் முதற்கட்டமாக, ஏலபெட்டியை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன.
ஆனால் ஏலப்பெட்டியில் வணிகர்கள் யாரும் ஒப்பந்த புள்ளி விபரங்களை போட வில்லை. இதனால் மாநராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள். பின்னர், தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. அப்போது 305 எண் கடையை ஏலம் எடுப்பதற்காக மீரா என்பவர், அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற ஆணையர் சரவணகுமார், ஏலம் எடுக்க தயாராக இருக்கின்றீர்களா என கேட்டு, ஏலம் நடைபெறும் அருகில் அழைத்து சென்று, நீங்கள் கேட்கும் கடைக்கு ரூ. 18 ஆயிரம் வாடகை, கடையை எடுத்து கொள்கீறீர்களா என்றார். இதனால் பயந்து போன, மீரா, ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைவரிடமும், கடை எண்ணை கூறி ஏலம் விடுங்கள் என்று கூறி விட்டு அமர்ந்து விட்டார். அங்கிருந்த திமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சண்முகநாதன், ஏலம் நடைபெறும் இடத்திற்கு வந்து, 305 எண் கடையை நான் ஏலம் எடுத்து கொள்கிறேன் என்றார். அப்போது அங்கிருந்த மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், அவசரமாக, கடை எண் 305, சண்முகநாதனுக்கு ரூ.16,500 க்கு ஏலம் விடப்பட்டது என்று மைக்கில் அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏலம் எடுக்க வந்தவர்கள், ஏலம் விடாமல் எப்படி அறிவித்தீர்கள் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், உடனடியாக மைக்கில்,மீண்டும் ஏலம் விடப்படும் என்றார். இதனால் அதிச்சியடைந்த சண்முகநாதன், நான் கேட்ட கடையை எனக்கு ஒதுக்கி அறிவித்து விட்டீர்கள். அதன் பிறகு எப்படி அக்கடையை ஏலம் விடலாம் என்று, பொறியாளரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த பொறியாளர் ஜெகதீசன், எதுவாக இருந்தாலும், ஆணையரிடம் கேளுங்கள் கூறி விட்டு, இருவரும் ஆணையர் அறைக்கு சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து, 305 கடைக்கு ஏலம் விடப்பட்டது. இதில் சண்முகநாதன் ரூ. 19,500 க்கும் 305 கடையை ஏலம் எடுத்தார். இதனால் ஏலம் எடுப்பது குறித்து குளறுபடியானதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தின் போது, ஏலம் எடுப்பவர்கள், ஏலம் நடைபெறும் இடத்தில் கூட்டமாக நின்றனர். மாநகராட்சி அலுவலர்கள், பல முறை, நாற்காலியில் அமருங்கள் என்று தெரிவித்தும், அமராததால், யப்பா இங்க வந்து உங்க பஞ்சாயத்து எல்லாம் வைச்சுக்காதீங்கள் என்று மைக்கில் காட்டமாக கூறியதையடுத்து, அனைவரும் நாற்காலியில் அமர்ந்தனர். ஏலம் விடப்பட்ட, சரபோஜி மார்கெட்டில் 308 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 6 கடைகள் மாநகராட்சி அலுவலகமும் மீதமுள்ள கடைகள், காய்கறி, மளிகை, டீக்கடை, உணவுவிடுதி, நாட்டு மருந்து என அனைத்து வகையான கடைகள் வைக்கலாம். இது பல்நோக்கு வணிக வளாகமாகும். ஆனால் 302 கடைகளுக்கு வெறும் 30 பேர் மட்டுமே ஏலம் எடுப்பதற்காக வந்தனர். இதனால், நாற்காலிகள் காலியாக இருந்தது.
இது குறித்து ஏலம் எடுக்க வந்தவர் கூறுகையில், சரபோஜி மார்கெட், தஞ்சாவூருக்கு பிரதான மார்கெட்டாகும். தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து கிராம மக்கள், தங்களது வாகனங்களில் வந்து அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி செல்வார்கள். இங்குள்ள கடைகள் அனைக்கும் சில்லரை மற்றும் மொத்தம் வியாபாரம் நடைபெறும். இதனால் பகல் இரவு நேரங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். விஷேச நாட்களில் அளவுக்கதிகமாக கூட்டம் வரும்.
ஆனால் இதை எல்லாமல், மாநகராட்சி நிர்வாகம் தெரியாமல், தற்போது கட்டியுள்ள கடைகள் 10க்கு 10 என்றும், அதை விட சிறிய கடைகளாக கட்டியுள்ளனர். இதனால் சில்லரை மற்றும் மொத்தம் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு கடையில் வியாபாரம் செய்ய முடியாது. அதே போல் 100 சதுரடி அளவுக்கு மேல் உள்ள கடைகளுக்கு 5 லட்சமும், அதற்குள் இருந்தால் 2 லட்சம் டேவணி தொகையை செலுத்தி, மாதந்தோறும் வாடகை, மின்கட்டணம் உள்ளிட்டவைகளை பார்த்தால், கடையை ஏலம் எடுத்து வியாபாரம் செய்தாலும், லாபம் பார்க்க முடியாது. இதனால் தான் வணிகர்கள் யாரும் ஏலம் எடுப்பதற்கு வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய, பழைய பஸ் நிலைய ஏலத்தின் போது, வாடகை அதிகமானதால், வணிகர்கள் போராட்டம் செய்தனர். அதனால், இக்கடைகளும் அதிக வாடகைக்கு ஏலம் போகும் என்பதால், வணிகர்கள் புறக்கணித்துள்ளார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது என்றார்.