சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் - தங்களுக்கே உரிய பாணியில் கவனித்த போலீசார்
’’கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சுரேந்தர் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள், ஒரு ஆயுத வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் உள்ளது’’
பட்டுக்கோட்டையில் சாலையில் பொதுமக்கள் மீது கற்களை வீசி ரவுடித்தனம் செய்து, ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர். பட்டுக்கோட்டை ஏ.வி.குளத்தைச் சேர்ந்த சுரேந்தர் (26), தங்கவேல் நகரைச் சேர்ந்த பி.பவிக்குமார் (26), எம்.பிரபாகரன் ஆகிய 3 ரவுடிகள் ஒரே மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் அடாவடித்தனம் செய்தவாறு வந்து கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த ரவுடிகளில் ஒருவரான சுரேந்தர், சாலையில் சென்று கொண்டிருந்த பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (29) என்ற எலக்ட்ரீசியனை, தனது காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதில் தடுமாறி கீழே விழமுயன்ற முத்துக்குமார், ஆத்திரத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்த ரவுடியை சத்தம் போட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த அந்த 3 ரவுடிகளும் முத்துக்குமாரை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவரை கற்களை வீசியும் கையால் அடித்தும் தாக்கியுள்ளனர். இதில் முத்துகுமார் பலத்த காயமடைந்தார். இதனையறிந்த, ஐஸ்க்ரீம் பார்லர் உரிமையாளர் முரளி, இது குறித்து ரவுடிகளை, தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த ரவுடிகள், முரளியை பலமாக தாக்கியதுடன் அவரது கடையை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். இதில் முத்துகுமார் மற்றும் முரளி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸார் மேற்படி ரவுடிகளை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அப்போது ரவுடிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரிந்து விழுந்ததில் ரவுடிகள் சுரேந்தர், பவிக்குமார் ஆகிய இருவருக்கும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆயினும், அவர்களது கூட்டாளியான ரவுடி பிரபாகரன் தப்பியோடி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், எலக்ட்ரீசியன் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து ரவுடிகள் சுரேந்தர், பவிக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சுரேந்தர் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள், ஒரு ஆயுத வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரவுடிகளால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல், இரவு நேரத்தில் ரவுடிகள் யாரும் அநாவசியமாக வெளியே வந்து, அடாவடித்தனம் செய்து கொண்டு சுற்றித்திரிய கூடாது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் எச்சரித்துள்ளார்.