காருண்யாவை காப்பாற்ற கரம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு? - அபூர்வ வகை இரத்த பாதிப்பால் உயிருக்கு போராடும் சிறுமி
பேராவூரணி அருகே அபூர்வ வகை இரத்தப் பாதிப்பு நோயால், 5 ஆண்டுகளாக சிறுமி ஒருவர் உயிர் பிழைக்க போராடி வருகிறார். கூலித் தொழிலாளியான பெற்றோர் மிகவும் வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர்: பேராவூரணி அருகே அபூர்வ வகை இரத்தப் பாதிப்பு நோயால், 5 ஆண்டுகளாக சிறுமி ஒருவர் உயிர் பிழைக்க போராடி வருகிறார். கூலித் தொழிலாளியான பெற்றோர் மிகவும் வேதனையில் உள்ளனர். அந்த சிறுமியின் உயிர் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (39). இவரது மனைவி பிரியதர்ஷினி (28). இவர்களுக்கு ஐந்து வயதில் காருண்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கண்ணன் கூலிக்கு தச்சு வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர்களது மகள் காருண்யா பிறந்த இரண்டு மாதத்தில் உடல் முழுவதும் மஞ்சளாக மாறி பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களிடம் அழைத்து சென்று பார்த்தபோது, மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால், குழந்தையின் ரத்தம் முறிந்து விட்டது. வேறு ரத்தம் மாற்ற வேண்டும் என சொல்லி உள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இருந்தபோதிலும் தொடர்ந்து குழந்தைக்கு ரத்தப் பற்றாக்குறை இருந்து வந்தது. மேலும், குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது.
குழந்தைக்கு மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி சோர்ந்து விழுந்ததால் அச்சமடைந்த பெற்றோர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உருவாகி மண்ணீரலுக்குச் செல்லும் போது, மண்ணீரல் அந்த ரத்தத்தை ஏற்காமல் போவதால் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு உள்ளது என்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக பிறந்த 2 மாதம் முதல் குழந்தைக்கு ரத்தம் செலுத்தி வந்துள்ளனர். குழந்தை இரண்டு வயதுக்கு பின்னர் 20 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசு டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தைக்கு 5 வயது கடந்ததும் மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைக்கு என்ன நோய் தெரியாத நிலையில் டாக்டர்கள் பெற்றோர் இருவருக்கும் குழந்தைக்கும் மரபணு பரிசோதனை செய்துள்ளனர். மேலும், அடிக்கடி பல்வேறு பரிசோதனைகள் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஆயிரக்கணக்கில் செலவு வருவதால், அதற்கு செலவு செய்ய வழியில்லாமலும், பரிசோதனை செய்யாததால் தங்கள் குழந்தைக்கு என்ன நோய் என தெரியாத நிலையில் தவித்து வருகின்றனர். மருத்துவ செலவிற்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் உத்சேமாக தெரிவித்துள்ளனராம். இந்நிலையில் கூலி வேலை செய்து வரும் கண்ணன் தனது மகள் காருண்யா உடல்நலக் குறைவு காரணமாக அவரை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், குழந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதால் வேலைக்குச் செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்.
போதிய படிப்பறிவு இல்லாத நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கள் சூழ்நிலையை உணர்ந்து குழந்தைக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தங்கள் குழந்தை உயிரை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தாயார் பிரியதர்ஷினி கூறுகையில், எங்களுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதத்திலேயே அவளது உயிரை காக்க மருத்துவ சிகிச்சை அளித்து போராடி வருகிறோம். எனது கணவர் குழந்தையை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துவதால், வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக குழந்தையையும் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பாற்றவே போராடி வரும் நிலையில், குழந்தையின் மருத்துவச் செலவு எங்கள் தலையில் விழுந்த இடி போல் உள்ளது. எனவே தமிழக முதல்வர் எங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வயிற்றில் பால் பார்க்க வேண்டும்" என்றார்.
குழந்தையின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு குழந்தையின் உயிரை காக்க உடன் நடவடிக்கை எடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.