அம்புட்டுதானா... இன்னும் கொஞ்ச நாளைக்கு இது கிடைக்காதா: ஏங்க விட்டுடுச்சே!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தக்காளி இன்று கிலோ ரூ.60க்கு கிடுகிடுவென்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்: அவ்வளவுதானா? இனி வீட்டுல இதை கேட்டா உதை விழுமோ. இட்லி, தோசைக்கு செம சைட்டிஷ் ஆன தக்காளி குருமா, தக்காளி சட்னிக்கு கட்டா என்று நடுத்தர மக்களை ஏங்க விட்டு இறக்கை கட்டி மீண்டும் உயரே பறக்க தொடங்கி விட்டது தக்காளி விலை.
தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
கைகளில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும். தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகின்றது. அதுமட்டும் இல்லாமல் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை கொண்ட தக்காளி தமிழகத்தின் சமையலில் வலுவான இடம் பிடித்துள்ளது. சாம்பாரா தக்காளி இருக்கும், ரசமா தக்காளி ரசம் டாப்போ டாப், இதெல்லாம் விட காலையில இட்லிக்கும், தோசைக்கும் தொட்டுக்க தக்காளி சட்னிதானே தேடப்படுகிறது. இப்படி சமையலறையின் முக்கிய அங்கமாக விளங்கும் தக்காளி அப்பப்போ தன்னை உயர்த்திக் கொள்கிறது. அட ஆமாங்க. ஜிவ்வுன்னு விலை உயரும். இல்லையா சர்...ர்ன்ன்னு விலை குறைந்திடும். இப்போ எப்படி என்கிறீர்களா?
தஞ்சையில் தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால கிலோ கணக்கில் வாங்கின மக்கள் கிராம் கண்ககில் வாங்க ஆரம்பிச்சு இருக்காங்க. தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறிகள் கடைகள் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் தினமும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் (25 கிலோ கொண்ட பெட்டி) பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
தஞ்சைக்கு பல மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தினமும் 1200 பெட்டிகளுக்கும் குறைவாகவே தக்காளி விற்பனைக்கு வருகிறது. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோ ரூ.60க்கு கிடுகிடுவென்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி வாங்க வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது.
இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விலை சற்று குறைந்து ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று விலை கிலோ ரூ.60ஆக உயர்ந்தது.
அதிலும் தஞ்சை மார்க்கெட்டுக்கு பெரிய ரக தக்காளி வரத்து இல்லை. குறைந்த அளவே வருகின்றன. சாதாரண மற்றும் சிறிய ரக அளவிலான தக்காளி மட்டுமே அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.