ரைட்டுல நாற்றம்... சைடுல நாற்றம்: என்னன்னு பார்த்து சரி செய்யுங்கப்பா?: தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டின் அவலம்
பஸ்சிற்காக காத்திருக்கும் போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுவாசிக்க முடியவில்லை. உணவகங்களில் உள்ள கழிவு நீரையும் கொட்டுகின்றனர்.
தஞ்சாவூர்: என்னப்பா இப்படி நாறுது... தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் இருந்து கழிவு தண்ணீர் கொட்டப்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்குள்ள கழிவறையில் டிரெய்னேஜ் குழாயிலிருந்து கசிவு ஏற்படுவதால் இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்டது
புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ்ஸ்டாண்ட் தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட பழைய பஸ் ஸ்டாண்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 49 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பழைய பஸ் ஸ்டாண்டில் 39 பஸ் நிறுத்தங்கள், 49 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, போலீசார் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அறை, ஒரு பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அரியலூர், மருத்துவக்கல்லூரி, மருங்குளம், அம்மாப்பேட்டை, பூதலூர் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்புடன் பழைய பஸ்ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வரும். இதில் இங்கு ஓட்டல் மற்றும் டீக்கடைகள், ஜூஸ் கடைகள் வைத்துள்ளவர்கள் கழிவு நீரை பஸ்கள் நிற்கும் பகுதியிலேயே கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த கழிவு தண்ணீரை மிதித்துக் கொண்டே செல்லும் நிலை உள்ளது. மேலும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாற்றம் அடிக்கும் பஸ் ஸ்டாண்ட்
அதாவது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இருந்து கழிவுகள் குழாய்கள் வழியாக பஸ்ஸ்டாண்டிற்கு வெளியில் உள்ள பாதாள சாக்கடையுடன் இணைத்திருக்கலாம். அந்த குழாய்களில் இருந்து கழிவு நீர் கசிவு ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால்தான் கடும் துர்நாற்றம் வீசுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து கடைகளில் இருந்து கழிவு நீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவறை கழிவு நீர் கசிவு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவாசிக்க முடியலைங்க... பயணிகள் வேதனை
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பஸ்சிற்காக காத்திருக்கும் போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுவாசிக்க முடியவில்லை. உணவகங்களில் உள்ள கழிவு நீரையும் கொட்டுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் பலரும் வெறும் காலில் இந்த அசுத்தமான நீர் கொட்டப்பட்ட இடங்களில் நடந்து செல்கின்றனர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பலரும் இப்படிதான் செல்கின்றனர். அவர்களுக்கு தொற்று நோய் பரவும் நோய் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்குள்ள கழிவறை நீர் பாதாள சாக்கடை இணைப்பில் கசிவு இருக்கும் என்று தெரிகிறது. அதனாலும் துர்நாற்றம் ஏற்படுகிறதோ என்ற அச்சம் உள்ளது என்றனர்.