தஞ்சையில் சமூக விரோதிகளால் ஓட்டுனர், நடத்துனர் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவம் என்பது தஞ்சாவூர் நகரக்கிளையில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம் ஆகும். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தாலும் தாக்கப்படும் சம்பவம் என்பது தொடர் கதையாகித்தான் வருகிறது.
தஞ்சாவூர்: போக்குவரத்து கழக ஓட்டுனர்-நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூரில் கரந்தை புறநகர் கிளை, ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகரக் கிளை என இரு கிளைகள் இயங்கி வருகிறது. இதில் தஞ்சாவூர் நகர கிளையில் பணிபுரிந்து வரும் ஓட்டுனர், நடத்துனர்கள் சமூக விரோத சக்திகளால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த ஒரு வருடத்தில் மூன்றாவது சம்பவமாக ஜெபமாலைபுரம் நகரக் கிளை ஓட்டுநர் காளிதாஸ், தற்செயல் நடத்துனர் தினசீலன் இருவரும் பணியின் போது கடந்த 2 ம் தேதி சுமார் மாலை 4.30 மணியளவில் கான்வென்ட் மேம்பாலம் வளைவில் திரும்பும்போது சமூக விரோத சக்திகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் என்பது தஞ்சாவூர் நகரக்கிளையில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம் ஆகும். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தாலும் தாக்கப்படும் சம்பவம் என்பது தொடர் கதையாகித்தான் வருகிறது. பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. ஓட்டுனர்- நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், மாவட்ட காவல் துறை பரவலான கண்காணிப்பை தொடர்ந்திடவும் வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டிஎம்சி தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், பொருளாளர் சி.ராஜமன்னன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, மத்திய சங்க தலைவர் டி.காரல் மார்க்ஸ், பொருளாளர் எஸ்.ராமசாமி, ஐஎன்டியூசி முன்னாள் பொதுச்செயலாளர் செயலாளர் என்.மோகன்ராஜ், டிஎம்எம்கே பொருளாளர் ரமேஷ்குமார், கரந்தை சிஐடியூ புறநகர் கிளை பொருளாளர் ராஜசேகர், நகர் கிளை செயலாளர் சந்திரசேகர்,ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.