வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா; தஞ்சை வழியாக பாதயாத்திரை செல்லும் வெளி மாவட்ட பக்தர்கள்
தொடர்ந்து இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்லவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தஞ்சை வழியாக பாதை யாத்திரையாக செல்கின்றனர். இதில் தேர் வடிவில் சப்பரம் செய்து பக்திப்பாடல்கள் ஒலிக்க இழுத்து செல்கின்றனர்.
வேளாங்கண்ணி பேராலய கொடியேற்று விழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொடியேற்றம் மற்றும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்
இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் , சிறிய வாகனம் மற்றும் தேரில் மாதா, இயேசு சொரூபங்களை வைத்து இழுத்த படியும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர்.
இயேசு சொரூபங்களை வாகனங்கத்தில் வைத்து ஊர்வலம்
குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குழுவாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குழந்தை இயேசுவையும், மாதா சொரூபங்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். அதன்படி திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி மாதா பாதயாத்திரை குழுவினர் சிறிய வாகனத்தில் மாதா, இயேசு சொரூபங்களை வைத்து அதனை இழுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த குழுவினர் தஞ்சை வழியாக வேளாங்கண்ணி நோக்கி நடந்து சென்றனர். அப்போது மாதா, இயேசு பாடல்களை ஒலித்தப்படி சென்றனர்.
ஆங்காங்கே இளைப்பாறி செல்லும் பக்தர்கள்
இதேபோல் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக செல்கின்றனர். மேலும் தஞ்சாவூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இடையிடையே ஆங்காங்கே இளைப்பாறிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து நடந்து செல்கின்றனர். திருச்சியிலிருந்து பாதயாத்திரையாக வருபவர்கள் கல்லணை வழியாக கிராமப்புறங்களில் புகுந்து செல்கின்றனர்.
இப்படி வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் நடந்து செல்கின்றனர். பலர் கைகளில் டார்ச் எடுத்துச் செல்கின்றனர். இருப்பினும் பக்தர்களில் பலர் தங்களின் பெயர் எழுதி மின்னும் வகையிலான டீ சர்ட்டுகளை அணிந்து செல்கின்றனர். இதனால் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் படும் போது பளிச்சென்று தெரிவது போல் அணிந்து செல்கின்றனர்.
தொடர்ந்து இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்லவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் இழுத்துச் செல்லும் சப்பரங்களும், அதிலிருந்து ஒலிப்பரப்பு செய்யப்படும் பக்திப்பாடல்களும் மக்களை வெகுவாக ரசித்து கேட்க செய்து வருகிறது.