'பொங்கல் எங்களுக்கு இனிக்காது.... கவலையுடன் வெல்லம் உற்பத்தியாளர்கள்
20க்கும் அதிகமான கிராமங்களில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்பது குடிசைத் தொழில் போன்று பல ஆண்டுகளாக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்: வெல்லம் தயாரிப்பு வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். பொங்கல் எங்களுக்கு இனிக்காது என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டையில் தொடங்கி இலுப்பக்கோரை, மாகாலிபுரம், உள்ளிக்கடை, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், மணலூர், தேவன்குடி, சோமேஸ்வரபுரம், பட்டுக்குடி, வீரமாங்குடி, திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட செம்மங்குடி, விளாங்குடி, ஓலைத்தேவராயன்பேட்டை என 20க்கும் அதிகமான கிராமங்களில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்பது குடிசைத் தொழில் போன்று பல ஆண்டுகளாக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளில் இந்த உருண்டை வெல்லம், அச்சு வெல்லம்தான் முக்கிய இடம் பிடிக்கும். பாரம்பரியமாக இந்த வெல்லத்தை பொங்கலுக்கு உற்பத்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு பொங்கல் திருநாளையொட்டி இந்த கிராமங்களில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உற்சாகமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் இந்த வெல்லம் உற்பத்தி பணி முழுவீச்சில் தொடர்ந்தது. ஆனால் நடப்பாண்டு தொடர் கனமழை, பூச்சி தாக்குதல் காரணமாக கரும்புகளில் இருந்து கிடைக்கும் சாற்றின் அளவு குறைந்துவிட்டது.
இதனால், வெல்லம், நாட்டு சர்க்கரை கிடைப்பதும் குறைவாக உள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கரும்பில் வெள்ளைப்பூச்சி, குருத்துப்பூச்சி, வேர் அழுகல் போன்ற பாதிப்புகள் தொடர் மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எஸ். முகமது இப்ராஹிம் கூறியதாவது:
இப்பகுதிகளில் முன்பு ஏறத்தாழ 6 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தற்போது 1,000 ஏக்கருக்குள்தான் பயிரிடப்படுகிறது. கரும்பு இயல்பாக 6 முதல் 7 அடி வளரக்கூடியது. ஆனால், தொடர் மழை, பூச்சி தாக்குதல் காரணமாக 3 முதல் 5 அடி வரை மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால், ஒரு டன் கரும்பில் 120 கிலோ வெல்லம், நாட்டு சர்க்கரை கிடைக்க வேண்டிய நிலையில், 80 முதல் 90 கிலோ மட்டுமே கிடைத்து வருகிறது.
கரும்பு வெட்டுவது முதல் காய்ச்சி வெல்லம் தயாரிப்பது வரை கிட்டத்தட்ட 20 பேர் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 500 முதல் 600 கூலி வழங்கப்படும் நிலையில், ரூ. 12 ஆயிரம் செலவாகிறது. இடுபொருட்கள் விலை, கூலி உயர்வு காரணமாக கிலோவுக்கு ரூ. 60 முதல் 70 விலை எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூ. 45 மட்டுமே கிடைக்கிறது.
தற்போது உற்பத்தியாகும் வெல்லம், நாட்டு சர்க்கரை தஞ்சாவூர், கும்பகோணம் சந்தைக்கு மட்டுமே செல்கிறது. இந்த விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், வெல்லம் உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து நிலவுவதால், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை விட்டு மாற்று சாகுபடிக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் காலம் காலமாக வெல்லம் உற்பத்தி செய்பவர்கள் தொடர்ந்து இத்தொழிலில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு நீடித்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வெல்லத்துக்கு தனியாக மண்டல அளவில் விற்பனை மையத்தை அரசு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.