(Source: ECI | ABP NEWS)
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு சிபில் ஸ்கோர் பார்க்கக்கூடாது... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ள பாசன மதகுகளில் இரும்பு தண்டவாளங்கள், இரும்பு ஷட்டர்கள் மரைகளுடன் உள்ள இரும்பு கம்பங்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு வழங்கும் கடனுக்கு சிபில் ஸ்கோர் பார்ப்பதை கைவிட வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. குறுவை தொகுப்பு திட்டம் அனைவருக்கு கிடைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
ஏ.கே.ஆர் ரவிச்சந்தர்: மேட்டூர் திறக்கும் தேதி தெரிந்தும், கல்லணை திறந்த பின்பும் குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை வேலையை தாமதமாக தொடக்கி பாதியில் நிறுத்தி உள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தூர்வாரும் பணியை பாதியில் நிறுத்தி உள்ளனர். தென்பெரம்பூர் விவிஆர் அணை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் மட்டும் என்று வரையறை வைத்துள்ளதை ஏற்க முடியாது. பயிர்கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்க்கின்றனர். இதனால் பல விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. எந்த நிபந்தனையும் இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடும் எலக்ட்ரானிக் தராசு பழுது நீக்கம் செய்யப்படாமல் எடை மோசடி நடந்து வருகிறது பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ள பாசன மதகுகளில் இரும்பு தண்டவாளங்கள், இரும்பு ஷட்டர்கள் மரைகளுடன் உள்ள இரும்பு கம்பங்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லஸ்கர் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜீவகுமார்: கல்லணை திறக்கும் அதே தேதியில் உய்யக்கொண்டான் மற்றும் கட்டளை கால்வாய் ஆறுகளை திறக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா ஆச்சாம்பட்டி, அகரப்பேட்டை, ஆவாரம்பட்டி, கடம்பன்குடி, காங்கேயம் பட்டி, கோவிலடி, மனையேரிப்பட்டி, நேமம், பாளையப்பட்டி தெற்கு, பவனமங்கலம், ராஜகிரி, ரெங்கநாதபுரம், சாணூரப்பட்டி, செங்கிப்பட்டி, சோழகம்பட்டி , திருச்சினம்பூண்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இந்த பகுதிகளை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்த பகுதிகளில் பருவம் தகுதி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் பணத்தை கடனுக்கு வரவு வைக்கின்றனர். இவ்வாறு செய்யக்கூடாது.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: உழவுப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உழவு மானியம் வழங்க வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பில் நோய் தாக்கம் உள்ளதால் அந்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு இயந்திர நடவு நட்டு கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த கரும்பு சிறப்பு ஊக்க தொகையை விரைவில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன்: திருவையாறு அருகே கருப்பூரில் கடந்த 2022ம் ஆண்டு ரூ.32.74 லட்சம் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதே பகுதியில் கிராம சேவை மையம் செயல்படுகிறது. இதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கோனேரிராஜபுரம், கருப்பூர் கிராம விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்துள்ளது. இதை புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டும்.
முகமது இப்ராஹிம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வரும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று உள்ளது. அதேபோல் கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வாழை, வெற்றிலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கணபதி அக்ரஹாரம் பகுதியில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை உடனே கட்டித் தர வேண்டும். அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் வேலைகள் முழுவதும் முடிந்து மிகக் குறைந்த பணிகள் மட்டுமே உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். பாபநாசம் அம்மாபேட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெருக்கடி கருதி உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
இளங்கோவன்: விவசாயிகளின் போர்வெல்லில் உள்ள மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் கருவிகளை அமைக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: கடந்த 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை. குறுவை சாகுபடி தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளது. காலதாமதத்தை தவிர்க்க கல்லணை கால்வாயில் 3500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். எனவே மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை விற்பனை நிலையங்களில் விதை நெல்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கான பில் கேட்டாலும் கொடுப்பதில்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
சுந்தர விமலநாதன்: தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது ஆனால் தண்ணீர் போதுமானதாக இல்லை. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை. குறுவை சாகுபடிக்கு 21,000 கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. 100 நாள் வேலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதனை இரண்டாம் களை எடுக்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் கூறப்பட்டது. அவர் பிறந்த கல்லணை கரையில் மணிமண்டபம் சிலை அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காமல் உள்ளது. அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமால் பாட்ஷா: சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி கடல் பகுதியில் காட்டாற்று பாசனம் தண்ணீர் வரும் பகுதியில் கடல் நீர் புகுந்து கலக்க நேரிடுகிறது. இதனால் அந்த பகுதி விவசாய நிலங்கள் பாதித்துக் கொண்டு வருகிறது. எனவே தமிழக அரசு இந்த காற்றாற்று பாசனம் தண்ணீர் வரும் பகுதியில் கடல் நீர் கலப்பதை தடுப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் உடனடியாக அணைக்கட்டு கட்டி தர வேண்டும். பேராவூரணி பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைக்க வேண்டும். பேராவூரணியில் நெல் சாகுபடி சாதகமாக இல்லாததால் அதிகப்படியான விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனர். ஆனால் இதுவும் நிலையாக இல்லாததால் செய்வதறியாது தவிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தேங்காய் உற்பத்தி திறன் அதிகம் உள்ள இந்த பகுதி முழுவதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தென்னையை சார்ந்தே உள்ளது. இதுவும் நிலையாக இல்லாததால் விவசாயிகளும், தொழிலாளர்களும் நாளுக்கு நாள் நலிந்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் தொழில் முதலீடு செய்யும் வகையில் ஒரு தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும்.
பெரமூர் அன்பழகன்: எப்ஆர் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பதிவு நிராகரிக்கப்பட்டுள்ளது. கணினி சிட்டா, பட்டாவுக்கும் ஆதார் அடையாள அட்டைகும் வித்தியாசம் இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து தீர்வு காண வேண்டும். குறுவை தொகுப்பு அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், வேளாண்மை துறை இணை இயக்குனர் வித்யா, உதவி இயக்குனர் ஐய்யம்பெருமாள், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் தமிழ்நங்கை, அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.





















