பூண்டு ரைட்ல, பெரிய வெங்காயம் லெப்டுல, தக்காளி விலையோ அப்-ல: உயரும் விலையால் வேதனையில் குடும்ப தலைவிகள்
பூண்டு விலையுயருது ரைட்ல, பெரிய வெங்காயம் விலை உயருது லெப்டுல, தக்காளி விலையும் அதிகரிக்குது அப்புல குடும்ப தலைவிகள் எல்லாம் சோகத்துல
தஞ்சாவூர்: பூண்டு விலையுயருது ரைட்ல, பெரிய வெங்காயம் விலை உயருது லெப்டுல, தக்காளி விலையும் அதிகரிக்குது அப்புல குடும்ப தலைவிகள் எல்லாம் சோகத்துல என்று வேதனை குரல் தஞ்சையில் எதிரொலிக்கிறது. என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்த வெங்காயம்
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் பெரியவெங்காயம் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையும் அதிகரித்துள்ளதால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவை உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேஷம், கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பல்லாரி இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழையால் பெல்லாரி, சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.
விலை ஏறுமுகமாக இருக்கும் வெங்காயம்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வரத்து குறைவினால் சின்ன வெங்காயம், பெல்லாரி விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. இதனால் பல்லாரி கிலோ ரூ.50 லிருந்து ரூ.70வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியும் கிலோ ரூ.40 லிருந்து 50 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரத்து குறைந்ததால் விலையும் அதிகரிப்பு
இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: வழக்கமாக நாள் தோறும் கர்நாடகம், மகாராஷ்டிரா உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 120 டன் பெல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். தற்போது அங்கு மழை பெய்ததால் வரத்து குறைந்து உள்ளது. இதனால் 100 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பெல்லாரி வெங்காயம் ரகம் வாரியாக கிலோ ரூ.50-லிருந்து ரூ.70- வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-லிருந்து ரூ.70 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையை தொடர்ந்து தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது.
மீண்டும் விலை உயர்ந்த பூண்டு
இதேபோல் கடந்த ஆண்டு வரத்து அதிகரிப்பினால் நாள் ஒன்றுக்கு 12 டன் முதல் 15 டன் வரை பூண்டு விற்பனைக்காக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு அதன் விலை ஏறுமுகமாகி உச்சத்தில் நீடித்தது. இதனால் பூண்டு விலை ரூ. 360 முதல் 400 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வரத்து சற்று அதிகரித்ததால் சில நாட்கள் நாட்டு பூண்டு மற்றும் மலைப்பூண்டின் விலை ரூ. 240 முதல் 260 வரை விற்பனையானது. இதை எடுத்து தற்போது மீண்டும் கடந்த ஜனவரி மாதத்தில் விலை உயர்ந்தது போல் அதன் விலை உயர்ந்து சில்லறை கடைகளில் கிலோ ரூ. 360 முதல் 400 வரையிலும் மொத்த கடைகளில் பூண்டு விலை கிலோ 340 முதல் 360 வரையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும் பூண்டு, வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால் சாம்பார் இனிமேல் வீடுகளில் வைக்கவே யோசனையாக இருக்கிறது என்று குடும்பத்தலைவிகள் வேதனையுடன் சொல்றாங்க.
இதேபோல் தக்காளி கிலோ ரூ.40 லிருந்து ரூ.50 வரை விற்கப்படுகிறது. இதனால் இவற்றை வாங்குபவர்கள் விலை அதிகமாக உள்ளதால் குறைவாக வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.