தஞ்சை மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் இருமடங்கு விலை உயர்ந்த பழங்கள்
தஞ்சையில் கடந்த சில நாட்களாக கோடைகாலம் எதிரொலியால் வரத்து குறைந்து பழங்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தஞ்சாவூர்: ரூ.100க்கு விற்று வந்த மாதுளம் பழங்கள் தற்போது வரத்து குறைந்ததால் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஜூஸ் கடை நடத்துபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் வெயில்
அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை சீரமைப்பு அமைப்பில் குழப்பம் ஏற்படும் பொழுது அது வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறுகளை உருவாக்குகின்றது. அது லேசான வலி முதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றை ஏற்படுத்தலாம். போதுமான அளவு நீர்ச்சத்து அல்லது ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு ஒருவர் நீண்ட நேரத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது இதுபோன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது
அதிகப்படியான வியர்வை காரணமாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உருவாகி வெப்ப சுருக்குகள் ஏற்படுகிறது. தாங்க முடியாத தசை வலி குறிப்பாக அடி வயிறு, தோள்பட்டை, கால்கள் போன்ற பகுதிகளில் வலி மற்றும் இதனுடன் சேர்ந்து வியர்வை ஆகியவை வெப்ப சருக்குகளுக்கான ஒரு சில அறிகுறிகள். நீர்ச்சத்து இழப்பின் விளைவாக மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தற்காலிகமாக ஒருவர் நினைவிழந்து மயக்கம் அடைகிறார். நீண்ட நேரத்திற்கு நின்றாலோ அல்லது உடலின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலோ இது ஏற்படுகிறது.
பழச்சாறுகளை அதிகம் சாப்பிடும் மக்கள்
இப்படி கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தஞ்சையில் கடந்த வாரத்தில் மாதுளம்பழம் கிலோ ரூ.100க்கு விற்பனையானது. இதனால் ஜூஸ் கடைகளில் மாதுளம் ஜூஸ் அதிகம் விற்பனையானது. இந்நிலையில் தஞ்சையில் வரத்து குறைந்துள்ளதால் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 1 கிலோ மாதுளை ரூ.250க்கு விற்பனையாகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள்
தமிழகத்திற்கு பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்தே அதிகளவு பழங்கள் கொண்டு வரப்படுகிறது. தஞ்சைக்கு ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்கள் டெல்லி, மராட்டியம், கர்நாடகா, கேரளா, நாக்பூர் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து நீடாமங்கலம், மன்னார்குடி, ஒரத்தநாடு, திருவையாறு, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பழங்களின் விலை படிப்படியாக உயர்வு
தஞ்சையில் கடந்த சில நாட்களாக கோடைகாலம் எதிரொலியால் வரத்து குறைந்து பழங்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட அனைத்து பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டாலே. அனைவரது வீடுகளிலும் ஊட்டசத்து மற்றும் வைட்ட மின்கள் நிறைந்த பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி உள்ளிட்டவற்றை வாங்கி பழச்சாறு செய்து குடித்து வருகின்றனர்.
ரகம் வாரியாக விலை உயர்ந்த பழங்கள்
வரத்து குறைவினால் மொத்த பழக்கடைகளில் 10 கிலோ கொண்ட ஒருபெட்டி காஷ்மீர் ஆப்பிள் ரூ.1400க்கு விற்றது. தற்போது ரூ.1600க்கும், ரூ.1600க்கு விற்ற துருக்கி ஆப்பிள் ரூ.1800க்கும் என அனைத்து ரக ஆப்பிள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் அதன் விலை ரகம் வாரியாக கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. இதே போல் ஆரஞ்சு கிலோ ரூ.140க்கும், மாதுளை கிலோ ரூ.250க்கும், 10 கிலோ கொண்ட மாதுளை ரூபாய் 2500க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80க்கும், பன்னீர் திராட்சை கிலோ ரூ.100க்கும், கிர்ணி கிலோ ரூ.50க்கும், அன்னாசிபழம் ரூ.90க்கும் விற்பனையாகிறது. விலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.