தண்ணீர் தொட்டி தேடி வந்தோமோ! தாகம் தீர திருப்தி அடைஞ்சோமே: மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் ஆசுவாசம்
தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கிடைத்தால் அது தேவாமிர்தம் போல்தான். அதுபோல மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் என்றால் அது குளம், குட்டை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர்தான்.
தஞ்சாவூர்: தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கிடைத்தால் அது தேவாமிர்தம் போல்தான். அதுபோல மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் என்றால் அது குளம், குட்டை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர்தான். தற்போது ஆற்றில் தண்ணீர் வராதால் இவை வறண்டு கிடக்கின்றன. இதனால் தாகத்தால் தவிக்கும் கால்நடைகள் தண்ணீர் தொட்டியை தேடி வருகின்றன.
குடிநீர் தொட்டியை தேடி வரும் கால்நடைகள்
தஞ்சை அருகே சித்திரக்குடியில் குறுவை சாகுபடி மேற்கொள்ளாத வயல்களில் தற்போதைய மழை காரணமாக புல், பூண்டுகள் முளைத்துள்ளன. இதில் மேய்ச்சலுக்கு மாடுகள், ஆடுகள் விடப்படுகின்றன. மதிய வேளையில் நா வறட்சி ஏற்பட்டு மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் தாகம் தீர்த்து வருகின்றன.
குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகள்
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வழக்கமாக ஜூன் மாதம் 12ம் தேதி அணை திறக்கப்படவில்லை. மேலும் மழை பெய்தால்தால் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் உள்ளனர். இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ளவில்லை.
வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள்
தற்போது தஞ்சை மாவட்டத்தில் மாலை நேரத்தில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாகுபடி செய்யப்படாத வயல்களில் புற்கள் வளர்ந்துள்ளது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை இந்த வயல்களில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். என்னதான உணவாக புல் கிடைத்தாலும் தண்ணீர் தேவைதானே. உச்சி வெயிலில் மனிதர்களே தாகத்தால் தவிக்கும் போது கால்நடைகளும் தண்ணீருக்காக குளம், குட்டைகளை தேடி செல்கின்றன. ஆனால் அவை வறண்டு போய்தான் உள்ளது.
கால்நடை குடிநீர் தொட்டியை தேடி வரும் மாடுகள்
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கால்நடைகள் தண்ணீரால் தவிக்க கூடாது என்பதற்காக சித்திரக்குடியிலிருந்து ஆலக்குடி செல்லும் சாலையின் ஆரம்பத்திலேயே ஒரு கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. தற்போது மேய்ச்சலுக்காக விடப்படும் மாடுகள், ஆடுகள் உட்பட கால்நடைகள் இந்த தண்ணீர் தொட்டியை தேடிவந்து அதில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்தி கொள்கின்றன.
ஆடு, மாடுகள் அனைத்திற்கு இந்த கால்நடை குடிநீர் தொட்டி மிகவும் உபயோகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மதியம் மற்றும் மாலை நேரத்தில் வேக, வேகமாக வரும் மாடுகள் இந்த குடிநீர் தொட்டியில் வரிசையாக நின்று தண்ணீர் குடிப்பதை தினமும் காண முடிகிறது.