நெடுநாள் கோரிக்கை நிறைவேறியது... கோபுராஜபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்த கொள்முதல் நிலையம்
கோபுராஜபுரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும் நெல்லை இங்கேயே விற்பனை செய்துக் கொள்ளலாம் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் ரூ.62.50 லட்சம் திட்ட மதிப்பீட்டிலான நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோபுராஜபுரம் கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகம் சார்பில் ரூ.62.50 லட்சம் திட்ட மதிப்பீட்டிலான நேரடி கொள்முதல் நிலையத்தை கடந்த 23.09.2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பிறகு 9 மாதங்கள் மேலாகியும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தஞ்சை மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கும்பகோணம் துணை மேலாளர் வெற்றிச்செல்வம் மற்றும் பொறியாளர்கள் கோபுராஜபுரத்தில் நேரில் வருகை புரிந்தனர். பின்னர் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு திறக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
தற்போது கோபுராஜபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து கொள்முதல் நிலையத்திற்கு பாபநாசம், குப்பைமேடு ,அரையபுரம், பெருமாங்குடி ,நத்தம், மட்டையாந்திடல் வளத்தா மங்கலம் , திருக்களஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோடை சாகுபடியில் அறுவடை செய்த நெல்களை கோபுராஜபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை கோபுராஜபுரம் கொள்முதல் பருவகால பணியாளர் விக்னேஷ் மற்றும் பணியாளர்கள் கொள்முதல் செய்தனர். இதனால் பாபநாசம், கோபுராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கோடை அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பகுதியில் முடிவடைந்து உள்ளது. சில பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோபுராஜபுரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும் நெல்லை இங்கேயே விற்பனை செய்துக் கொள்ளலாம் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நாங்கள் இந்த பகுதியில் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை செய்யும் நெல்களை வேறு பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்கள் சென்று தான் விற்பனை செய்து வந்தோம். நீண்ட நாட்களாக கோபுராஜபுரம் கிராமத்தில் கட்டி முடித்த நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். இதையடுத்து தஞ்சை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளரிடம் திறக்க வேண்டும் என தெரிவித்தோம்.
தற்போது சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கு உள்ள செடிகளை சுத்தம் செய்தனர். தற்போது அவை அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் நாங்கள் சாகுபடி செய்யும் நெல்லை இங்கேயே விற்பனை செய்வோம். இதனால் அலைச்சல் மற்றும் கால விரயம், கூடுதல் செலவு ஏற்படுவது குறைந்து விட்டது. இது எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















