தஞ்சாவூரில் தாட்கோ சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள்: பயனாளிகளிடம் நேரில் ஆய்வு
தாட்கோ சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப்பணிகள் நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணனுடன் நேரில் சந்தித்து தாட்கோ சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.
பயனாளிகளுடன் நேரில் சந்திப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன் தாட்கோ மூலம் பயன்பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன் தெரிவித்ததாவது: தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் அவர்களுக்கு உலர் மீன் விற்பனையகம் ரூ.8,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,80,000 மானியத்தில் ரூ.4,80,000 வங்கிக் கடன் தொகையும், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த வினோதினி அவர்களுக்கு பல்மருத்துவமனை ஆரம்பிக்க ரூ.7,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,10,000 மானியத்தில் ரூ.4,55,000 வங்கிக் கடன் தொகையும், திருக்கருக்காவூரைச் சேர்ந்த திரு.சதீஸ் குமார் என்பவருக்கு உரக்கடை அமைக்க ரூ.8,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,80,000 மானியத்தில் 5.4,80,000 வங்கிக் கடன் தொகையும் பெற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிலககங்களை நேரில் ஆய்வு செய்தார்.
வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்
வங்கி கடன் பெறுவதில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், தொழில் தொடங்கிய பின் அவர்களது வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும், வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகை மற்றும் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரம் மேம்பாடு குறித்தும் பயனாளிகளிடம் கேட்டு அறியப்பட்டது. தாட்கோ மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெறுமாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
ஆய்வின் போது தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜ், உதவி மேலாளர்கள் செந்தில் குமரன் , ராஜ்குமார், மண்டல திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன், தாட்கோ செயற்பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல்
இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
இதில் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1092 கோடி திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகம் மூலம் 85 நிறுவனங்களுடன் ரூ.1675.66 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 20 நிறுவனங்கள், ரூ.265 கோடி மதிப்பில் உற்பத்தியை தொடங்கி உள்ளன. மீதமுள்ள 65 நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு நிலையில் உள்ளது. அந்த நிறுவனங்களின் முன்னேற்றத்தை அறியும் பொருட்டு, நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தொழில் முனைவோர்கள், பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தொழில் முனைவோர்கள் எதிர் கொள்ளும் இடர்பாடுகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மணிவண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.