பாபநாசத்தில் தல, தளபதி.....பார்க்க குவிந்த ரசிகர் பட்டாளம்..!
அச்சு அசலாக அஜித், விஜய்யின் உருவத்தில் சுமார் 6 உயரத்தில் செய்யப்பட்டு இருந்த கேக்தான் அனைவரையும் ஈர்த்தது.
தஞ்சாவூர்: எத்தனை, எத்தனை வகைகள் அனைத்தும் பார்க்கும் போது சாப்பிட தோன்றுகிறதே என்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் அன்பு பேக்கரியில் நடந்த கேக் திருவிழாவை பார்த்தவுடன் சொல்ல தோன்றியது. இதில் செம ஹைலைட் என்னவென்றால் தல-தளபதி ஆளுயரத்திற்கு தோள் மேல் கை போட்டு நின்றதுதான். அட ஆமாங்க.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ளது அன்பு பேக்கரி. இங்கு கேக் திருவிழா கண்காட்சி தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் செம ஸ்பெஷலாக பல வகை கேக் இடம் பிடித்தது. கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உட்பட 100க்கும் மேற்பட்ட கலர், கலராக, வகை வகையான கேக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பார்த்தவுடன் அள்ளிச்சுவைக்க வேண்டும் போல் அனைத்து கேக்குகளும் இருந்தன. இதில் மற்றொரு ஸ்பெஷல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வெவ்வேறு வகையான புதிய சுவையில் கேக்குகள் தயார் வந்து கொண்டே இருந்தது. இந்த கேக் திருவிழாவின் செம மாஸ் ஹைலைட் விஷயம் தல-தளபதிதான். அட ஆமாங்க. இரண்டு பேரும் தோள் மீது கை போட்டு நின்றாங்க பாருங்க. கூட்டம் இவங்களை பார்க்கவே குவிந்து என்றால் மிகையில்லை. என்னப்பா சொல்றீங்க. தல-தளபதி எப்போ வந்தாங்க என்று கேட்காதீங்க. அச்சு அசலாக அஜித், விஜய்யின் உருவத்தில் சுமார் 6 உயரத்தில் செய்யப்பட்டு இருந்த கேக்தான் அனைவரையும் ஈர்த்தது. மொத்தம் 120 கிலோ எடை கொண்ட இந்த கேக்கை பார்க்கவும், மற்ற கேக்குகளை ருசிக்கவும் தல, தளபதி பேன்ஸ் குவிந்து விட்டனர்.
இந்த கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பேக்கரி கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும், பொதுமக்களும் கண்டு, கேக்குகளை உண்டு மகிழ்ந்தனர். இங்கு ஐந்து ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையிலும் 60 வகை கேக்குகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அன்பு பேக்கரி உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், “நான் ஜெர்மனிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த போது அங்குள்ள பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் செய்து அசத்தி இருந்தனர். அந்நாட்டில் உள்ள பிரபலங்களை அச்சு அசலாக கேக்கில் செய்தனர். இதேபோல் நம்ம ஊரிலும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக பல பயிற்சிகள் எடுத்து இப்போது இந்த கேக் திருவிழாவில் தமிழக சினிமா துறையில் தங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அஜித், விஜய் ஆகியோர் உருவம் போன்று கேக் தயாரித்து வைத்தோம். இதற்கு இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த உருவ கேக் மூன்று நாட்கள் நடைபெறும் கேக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.