தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் - பெரியார் சிலை முன்பு உறுதியேற்பு
பெரியார் வகுத்துத் தந்த சமூக நீதிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம், இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியை பாதுகாப்போம், மனுதர்ம சனாதன முறைகளுக்கு எதிராக, எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம்.
தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம். சமூக நீதிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம் என்று இடதுசாரிகள் பொது மேடை சார்பில் நடந்த தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் உறுதி ஏற்கப்பட்டது.
பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை
தமிழ்நாட்டில் நிலவி வந்த மூடநம்பிக்கை, மனுதர்ம- சனாதன அடிமை முறைகளை ஒழித்திட, பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை, கல்வி, விதவைத்திருமணம், சம உரிமை, விடுதலை வேண்டும் என்று பெண்கள் உரிமைகளுக்கு போராடிய, மனிதனை மனிதன் சமமாக நடத்த வேண்டும், தீண்டாமைக் கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று சுயமரியாதை கொள்கையை உயர்த்திப் பிடித்த, சமூக நீதிக் கொள்கையை வகுத்து தந்த தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருங்கிணைப்பாளர் கே.மூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழக இணைச் செயலாளர் ராவணன், மாநகர நிர்வாகிகள் கரிகாலன், கத்தீஜா, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகிகள் சாமிநாதன், தாமஸ், மாரிமுத்து, செந்தமிழ் செல்வன், அசோக், ஹரிஹரன், வீரமணி, பிரவீன், ரவி, செல்வகுமார்,ஆட்டோ பாதுகாப்பு சங்க லெட்சுமணன்,விக்கி, மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய ஆட்டோ சங்க நிர்வாகிகள் மணிகண்டன், தினகரன், நந்தகுமார், வெங்கடேசன்,குமரன், சுரேஷ், ரமேஷ்குமார் ஜஸ்டின் ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொள்கைகளை இளைய தலைமுறை அறிந்து கொள்ளணும்
இதில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, பெண்களுக்கு சம உரிமை ,கல்வி, வேலை வாய்ப்பு ,தாய்மொழி தமிழ் வழி கல்வி, பிற ஆதிக்க மொழிகள் எதிர்ப்பு, சமூக நீதிக் கொள்கை உள்ளிட்ட கொள்கைகளை இளைய தலைமுறை அறிந்து கொள்ள தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சமூக நீதிக் கொள்கையை உயர்த்திப்பிடிப்போம்
மேலும் பெரியார் வகுத்துத் தந்த சமூக நீதிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம், இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியை பாதுகாப்போம், மனுதர்ம சனாதன முறைகளுக்கு எதிராக, எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம், தமிழ் மொழியை, தமிழ் மொழிக் கல்வியை அழிக்கின்ற, புதிய தேசிய கல்விக் கொள்கையை விரட்டியடிப்போம், தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமைகளை முற்றிலுமாக ஒழித்திடுவோம் , பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம், பெண்களுக்கு சம உரிமை அளித்திடுவோம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்.
பெரியார் வகுத்து தந்த சமூக நீதிக் கொள்கையை உயர்த்தி பிடிப்போம், நதிநீர்,கல்வி , நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருவதற்கு எதிராக, மனுதர்ம-சனாதன கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.