தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் 8 ஒலிப்பெருக்கிகள் அமைப்பு
தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட பழைய பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. ரூ.29.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டது. அதன்பின், இதை 2021 டிச.8-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி, புனரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து அம்மாப்பேட்டை, திருக்கருக்காவூர், பாச்சூர், ஒரத்தநாடு, பூதலூர், வடுவூர், புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம் ஆகிய பகுதிகளுக்கு ஒரு பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மற்றொரு பகுதியில் இருந்து அரியலூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், சென்னை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்களை உதவி மையத்தில் இருந்து நேரடியாக போலீசார் கவனித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கேட்டால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரங்களில் கைகலப்பாகவும் மாறி வருகிறது.
இந்த சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போலீசார் ஒவ்வொரு முறையும் நேரில் சென்று பிரச்னையை சரி செய்யும் நிலை உள்ளது. இதனால் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர். அதன்படி வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை தஞ்சை நகர டிஎஸ்பி ராஜா தொடக்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், பஸ் நிறுத்தும் இடங்களில் டூ வீலரை பார்க்கிங் செய்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து கேட்டால் பிரச்னையாகிறது. இப்போது கண்காணிப்பு கேமராக்கள் வழியாக போலீசார் பார்த்து உடன் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்கின்றனர். இதனால் வாகனங்களை வைப்பவர்கள் சட்டென்று எடுத்து சென்று விடுகின்றனர். தேவையற்ற பிரச்னையும், வாக்குவாதமும் இதனால் தவிர்க்கப்படுகிறது. இது மிகவும் நல்ல விஷயம் என்று தெரிவித்தனர்.