மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231 கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு
’’4 தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர்’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10.40 கோடி வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூதனன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிபதி எஸ். ஜெயசிங், முதன்மை சார்பு நீதிபதி ஜி.என். சரவணகுமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. முகமது அலி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, மோட்டார் வாகன விபத்து வழக்குச் சிறப்பு சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை,விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் எம். முருகேசன் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் காசோலை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.சுந்தர்ராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.அனிதாகிருஷ்டி, இரண்டாவது நீதித்துறை நடுவர் பி.மோசஸ் ஜெபசிங் ஆகியோர் கொண்ட அமர்வில் உரிமையியல் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. மலர்விழி, கூடுதல் சார்பு நீதிபதி எம். முருகன், மூன்றாவது நீதித்துறை நடுவர் சி. பாரதி ஆகியோர் கண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10 கோடியே 40 லட்சத்து 21 ஆயிரத்து 231 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்குப் பெற்றுத் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா, தஞ்சாவூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் சி. அமர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில் முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின்தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி .எஸ். மும்தாஜ், வட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் திரு. செந்தில்குமார் மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி. டி.சண்முகப்பிரியா அவர்கள் தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.வி.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திருமதி ஆர்.கவிதா ஆகியோரது பங்கேற்பில் நடைபெற்றது.
அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் திரு.கே.நிலவரசன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி திரு.பி.தரணிதர், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திரு. ஆர்.ரகுவீரன் பங்கேற்பில் மொத்தம் 638-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 439-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் 32-திருமண தகராறு சம்பந்தப்பட்ட வழக்குகளில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த தம்பதிகளிடம் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் குழுவினரின் கலந்தாய்வில் சமரசம் ஏற்பட்டு 4-தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர், அவர்கள் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
32 காசோலை மோசடி வழக்குகளுக்கான தீர்வில் ரூ. 89,26,855 ம், 54 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.1,77,77,000,19 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ. 7,83,495, 163 குற்றவியல் வழக்குகள் மூலம் ரூ.1,24,400 , 167 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.97,100 என ஆக மொத்தம் ரூ.2,77,08,850 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், கே.குணசீலன மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.