எப்போதும் நாங்கள் பொதுமக்களின் தோழன்தான்... பெருமிதத்துடன் கூறிய மேயர்
தேரோட்டத்தின் போது மக்களுக்கு தேவையான குடிநீர் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: நாங்கள் இப்போதும் மட்டுமல்ல எப்போதும் பொதுமக்களின் தோழன்தான் என்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோயிலை கட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.
இத்தகைய பெருமை வாய்ந்த பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதை ஒட்டி தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து 18 நாட்கள் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 7ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என இலட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
விழாவையொட்டி தேர் வலம் வரும் நான்கு ராஜ வீதிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார். மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜவீதி என தேர் வலம் வரும் நான்கு ராஜ விதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேர் வலம் வரும் சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் .நிழற்குடை அமைக்க வேண்டும்.
ராஜ வீதிகளில் மழை நீர் வடிகால் சாக்கடைகள் மூடப்படாமல் உள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் சண்.இராமநாதன் உத்தரவிட்டார். தேர் திருவிழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள், பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தேரோட்டத்தில் பங்கேற்க உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர். இதற்காக அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மக்களின் தோழன்தான். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தேரோட்டத்தின் போது மக்களுக்கு தேவையான குடிநீர் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















