தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா: ஆட்டம் பாட்டத்துடன் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்
மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கரகாட்டம், பளுதூக்குதல், ஒயிலாட்டம், ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது. மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பாரம்பரிய மிக்க பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல், பொங்குதல் என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம். பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண் பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.
இயற்கை வளத்தால், மும்மாரி மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் பெருகும். காடு, கழனி நனையும். சூரிய வெளிச்சம் பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி சிறக்கும். அறுவடை செய்த நெல்லை அரைத்து, அரிசி எடுத்து, பால்,நெய் சேர்த்து, பானையில் இட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து தாங்களும் உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.
தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. தமிழர்களின் பாரம்பரியமிக்க விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியை சேர்ந்த 14 துறைகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்தின.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன், கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு ஆசிரியர் கழக இணை தலைவர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கலின் தனிச்சிறப்புகள் குறித்து தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழடியான் சிறப்புரையாற்றினார். தஞ்சை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திருமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு காளை மற்றும் கிராம முறைப்படி வயல் உழவுக்கு தேவைப்படும் டிராக்டர் ஆகியவற்றை காட்சிப்படுத்தி சிறப்பு செய்தார்.
விழாவை முன்னிட்டு 14 துறைகளையும் சேர்ந்த மாணவிகள் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்து பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டு உற்சாகத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். முன்னதாக மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கரகாட்டம், பளுதூக்குதல், ஒயிலாட்டம், ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவிகளாக இருந்து தற்போது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி ஒளிபரப்பப்பட்ட திரைப்பட பாடல்களுக்கு மாணவிகளின் உற்சாக நடனம் களைகட்டியது. நிகழ்ச்சிக்குக்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை தலைவர் தனியா, துணைத்தலைவர் சோனா அகல்யா, செயலாளர் ரமா மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். நிறைவாக தமிழ் துறை உதவி பேராசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்