Thanjavur: ஓய்வு ராணுவ வீரர்களின் சலுகைகளை போல் துணை ராணுவ படை வீரர்களுக்கும் வழங்க வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு எந்த அளவுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகிறதோ, அதே போல் துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூரில் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்டப் பொருளாளர் வி.தமிழ்வாணன் வரவேற்றார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டமைப்பின் எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பி.ரவி. எஸ்.முருகேசன், ஜி.பூபதி, எஸ்.கோப்பெருந்தேவி, டி.எஸ்.தசரதராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் துணை ராணுவப் படை வீரர்களுக்கு தமிழக அரசு நல வாரியம் அமைத்து, அதன் மூலம் மாவட்ட அளவில் கேன்டீன் வசதிகள், வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு எந்த அளவுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகிறதோ, அதே போல் துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ராணுப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கும் உயர்கல்வி இடஒதுக்கீடான 2 சதவீதத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துக்கூறும் வகையில் வலுவான மக்கள் பிரதிநிதி தேவை என்பதால், வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிடுவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நமது ராணுவத்துக்கு துணையாக இருக்கக் கூடியவை 7 படைப் பிரிவுகள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் (ஏஆர்), எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எப்) , மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிபிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), இந்தோ- திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி), தேசிய கமாண்டோ படை (என்எஸ்ஜி) , சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவைதான் துணை ராணுவப் பிரிவுகள்.
7 துணை ராணுவப் படையிலும் மொத்தம் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 7 படைப்பிரிவினரும் எல்லைகளில் ராணுவத்துக்கு உதவி செய்யும் படைப் பிரிவினர். பொதுவாக தேடுதல், கைப்பற்றுதல், ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்தல் ஆகியவற்றை துணை ராணுவப் படை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.