ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு கிடைத்த வாழ்த்தும்... எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்க விடும் முயற்சியும்!!!
ஒன்றிய அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரை பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்.
பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது.
வெறுப்பும், வேற்றுப்படுத்தலும், வன்மமும், வன்முறையும் தலைவிரித்தாடச் செய்து, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயக அமைப்பு முறையை, சமூகநீதியை, பன்முகத்தன்மையை, மனித உரிமைகளைத் தகர்க்கும் வேலைகளை ஒன்றியத்தை ஆளும் பாஜகவும் அதன் குடும்ப அமைப்புகளும் தடையின்றி செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து இந்தியா எனும் பெருங்கனவை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கும் வகையில் இன்று குமரி முனையிலிருந்து “இந்திய ஒற்றுமைப் பயணம்” எனும் ஒரு பெருமுயற்சியை ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் இந்த அறிய முயற்சி இன்றியமையாத அவசியமான ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரை பயன்படும் என்று திடமாக நம்புகிறேன். 150 நாட்களில் ஒரு கோடி பேரை சந்திக்கும் இந்த பரப்புரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
தமிழகம் வருகை தந்துள்ள ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்க விட முயன்றனர். போலீஸார் பலூன்களை பறித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் தமிழகத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தியே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்பி, கருப்பு பலூன்களை பறக்க விட முயன்றனர். இந்த பலூன்களை போலீஸார் பறித்ததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.இந்த போராட்டங்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ப.கார்த்திக்ராவ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுகுமார், மாவட்டச் செயலாளர் பி.கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து கார்த்திக்ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சியே காரணமாகும்.
அதே போல் இந்தியாவிலிருந்து வங்கதேசம், கச்சத்தீவு, பாகிஸ்தான் ஆகியவை பிரிந்து செல்லவும் காங்கிரஸ் கட்சியே காரணமாகியுள்ளது. ஆனால், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது இந்திய ஒற்றுமை நடைபயணம் என நடிப்பு யாத்திரையை தொடங்குகிறார். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த ராகுல் காந்தி தமிழகத்துக்கு வரக்கூடாது திரும்பி போக வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் கருப்பு பலூன்களை பறக்க விடும் முயற்சியிலும், ராகுல்காந்தி உருவ பொம்மையை எரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, தற்போது சாலை மறியல் செய்து கைதாகியுள்ளோம் என்றார்.