தக்காளியை தூக்கி சாப்பிட்டு உச்சத்தில் இருந்த பூண்டு.. தற்போது படிப்படியாக குறையும் விலை
வடமாநிலங்களில் பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுவதால் பூண்டு விலை இனி படிப்படியாக குறையும். பூண்டு விளைவிக்கும் பகுதியில் தற்போது விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர்: தக்காளியை தூக்கி சாப்பிட்டு விலை உச்சத்தில் இருந்த பூண்டு தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது. தஞ்சையில் பூண்டு விலை சற்று குறைந்து நாட்டு பூண்டு கிலோ ரூ.350 விற்பனையாகிறது.
தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா, தெலங்கனா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதேபோல், வடமாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பூண்டு இங்கு விற்பனைக்கு வரும். அங்கிருந்து பூண்டு விற்பனைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக தஞ்சை உழவர் சந்தைக்கு 10 முதல் 20 டன் வரை பூண்டு விற்பனைக்காக வரும்.
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக வரத்து குறைவினால் 4 முதல் 5 டன் வரை மட்டுமே பூண்டு வருகிறது. பூண்டு ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து. அதிலும் குறிப்பாக செரிமான கோளாறை தடுப்பதற்கும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நாள்தோறும் அதிகளவில் வாங்கி செல்வார்கள். ரசம், பொரியல், புளிக்குழம்பு உட்பட சமையலில் பூண்டு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் வரத்து குறைந்ததால் தஞ்சை உழவர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு பூண்டு விலை கிலோ ரூ.400 முதல் ரூ.520 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை விட பூண்டு விலை உச்சத்தை தொட்டது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கிராமப்புறங்களில் வேனில் வைத்து பூண்டு விற்பனை அதிகளவு நடக்கும். ஆனால் விலை உயர்வுக்கு பின்னர் கிராமப்புறங்களில் வந்து பூண்டு விற்பவர்கள் எண்ணிக்கை சட்டென்று குறைந்தது.
முக்கியமாக நடுத்தர மக்கள் வீடுகளில் பூண்டு சட்னிக்கு தடை விழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசத்தில் கூட பூண்டை சேர்க்கவில்லை நாங்கள் என்றும் பெண்கள் தெரிவித்தனர். கிடுகிடுவென்று விலை உயர்ந்து உச்சத்தில் இருந்தது நாட்டுப்பூண்டு.
தற்போது வரத்து அதிகரித்துள்ளது. அதனால் பூண்டியில் விலை வெகுவாக குறைந்து கிலோ ரூ.350 வரையிலும், சீடு பூண்டு கிலோ ரூ.380க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சைனா பூண்டு வரத்து தற்சமயம் இல்லை.
இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், வடமாநிலங்களில் பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுவதால் பூண்டு விலை இனி படிப்படியாக குறையும். பூண்டு விளைவிக்கும் பகுதியில் தற்போது விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பூண்டு விலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.