முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் மறைவால் சோகவீடாக மாறிய திருமண வீடு
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பால் நேற்று காலமானார்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா (83) நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவர்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தஞ்சாவூர் கல்லுக்குளம் சாலையில் வசித்து வந்தவர் உபயதுல்லா. தஞ்சாவூரில் ஆரம்பத்தில் லாட்டரி சீட்டு தொழில் நடத்தி வந்தார். பின்னர் ஜவுளி, பேன்சி பொருட்கள், பல்பொருள் அங்காடி என வியாபாரத்தை கவனித்து வந்தார்.
இதே போல் அரசியலில் ஆர்வம் கொண்ட உபயதுல்லா திமுக தொடங்கிய காலம் முதல் அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்றினார்.
1987-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் திமுக நகர செயலாளராக பணியாற்றினார். அதே போல் தஞ்சாவூர் தொகுதியில் நான்கு முறை திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
தமிழ் மொழி மீது கொண்டிருந்த பற்றுதல் காரணமாக தஞ்சை முத்தமிழ் மன்றத்தை நடத்தி வந்தார். அதே போல் திருக்குறள் மீது அதீத பற்றுதல் கொண்டிருந்தார். தான் பேசும் கூட்டங்களில் திருக்குறளையும், தமிழ் மொழியையும் மேற்கொள் காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவருக்கு குறள்நெறிச் செல்வர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் மொழி மீது கொண்டிருந்த பற்றுதலால் கடந்த 2020ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி விருதையும், 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேரறிஞர் அண்ணா விருதையும் பெற்றார். இந்நிலையில் உபயதுல்லாவின் தங்கையின் பேரனின் திருமணம் இன்று தஞ்சாவூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்காக கடந்த சனிக்கிழமை உறவினர்கள் பலரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார் உபயதுல்லா. அப்போது லேசான மயக்கம் வருவதாக கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் உபயதுல்லாவின் திருமண வீடு சோகவீடாக மாறியது. தொடர்ந்து உபயதுல்லாவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று (பிப்.20) ஆற்றுப்பாலத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் உபயதுல்லா இறந்த தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தஞ்சாவூரில் மன்னை. நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜனின் அன்பை பெற்றவரும், 27 ஆண்டுகள் தொடர்ந்து நகர செயலாளராகவும், நான்கு முறை எம்எல்ஏவாகவும், அமைச்சரவாகவும் இருந்தவர் உபயதுல்லா. கட்சியின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய உபயதுல்லாவின் மறைவு கழகத்துக்கு பேரிழப்பாகும். உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கட்சியினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.