தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே தூர்வாரும் பணிகளை முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
டெல்டா பாசன பகுதியின் முக்கியமான சாகுபடி காலமாகவும், ஜீவாதார பருவமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முடிய குருவை சாகுபடி பருவம் விளங்கி வருகிறது.
தஞ்சாவூர்: சம்பா, தாளடி சாகுபடி அறுவடை முடிந்து விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து விட்டனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை உழவும் நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரி பழுதடைந்துள்ள ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் மேட்டூர் அணையாகும். தமிழ்நாட்டின் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையையும் மேட்டூர் அணை மூலம் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டெல்டா பாசன பகுதியின் முக்கியமான சாகுபடி காலமாகவும், ஜீவாதார பருவமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முடிய குருவை சாகுபடி பருவம் விளங்கி வருகிறது. இதன் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் ஜூன் 6ம் தேதியே காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி அகரமாங்குடி குணசேகரன் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள காவிரி, குடமுருட்டி வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, மண்ணியாறு, சுள்ளான் ஆறு, தூரி ஆறு, வடவாறு மற்றும் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களை நவீனப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும்.
கிளை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள், பாசன மதகுகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும். இதனால் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி முறையாக கிடைக்கும். எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு முழுமையாக தூர்வாரும் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.