கோயில் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் - 3 மாத கால ஊதியம் வழங்கவில்லை என புகார்
தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு நேர பாதுகாவலர்களாக 64 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் கோயில் பாதுகாவலர் நலச் சங்கத்தின் உபத் தலைவர் ஆர்.பாலு, செயலாளர் ஆர்.மனோகரன், பொருளாளர் எஸ்.விஜயேந்திரன், செய்தி தொடர்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சம்பள நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு நேர பாதுகாவலர்களாக 64 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கோயில்களில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை நாங்கள் பாதுகாத்திடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாத காலத்துக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

நாங்கள் எங்களது சொந்த செலவில் தினமும், பல கிலோமீட்டர் பயணம் செய்து, எங்களது வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு செலவு செய்து கோயிலில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பலருக்கு ஓய்வூதியம் இல்லாமலும் உள்ளனர். இதனால் பெரிதும் பொருளாதார ரீதியில் சிரமப்படுவதால், எங்களுக்குரிய மூன்று மாதகால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். சம்பள நிலுவை தொகை வழங்காததால், முன்னாள் ராணுவத்தினர் பலரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். அருகில் உள்ளவர்கள், நண்பர்களிடம் கடன்களை பெற்று அன்றாட செலவுகளை நடத்துகின்றனர். சிலரது குழந்தைகள் கல்லுாரியில் படிப்பதால், பணம் கட்ட முடியாமல், வேதனைக்குள்ளாகி உள்ளனர்.

இரவு நேரத்தில் எங்களது உயிரை பற்றி கவலைப்படாமல், வீட்டிலுள்ளவர்களை பற்றி சிந்திக்காமல், கோயில்களையும், அதிலுள்ள மதிக்க முடியாத சிலைகளையும் துாங்காமல் உடலை வருத்தி, மேற்கொண்டுள்ள பணியினை கடமையை கண்ணும் கருத்தமாக பாதுகாத்து வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு சம்பள தொகையை வழங்காமல் அலைகழிப்பது எங்களை அவமானப்படுத்தவதாகும். நாட்டை பாதுகாத்த முன்னாள் ராணுவத்தினர்கள், ஒய்வு பெற்ற பிறகு எங்களால் இந்நாட்டிற்கு எங்களது பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று இரவு நேர பணிக்கு வந்தால், எங்களை மதிக்காமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளது. எனவே, நாட்டுக்காக பாடுபட்டு விட்டு, ஒய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து பணியில் இருக்கும் முன்னாள் ராணுவத்தினரை மதிக்க வேண்டும் என்றால், உடனடியாக மூன்று மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றனர்.முன்னதாக தஞ்சாவூர் முன்னாள் ராணுவத்தினர் படை வீரர் அலுவலகத்தில், நலச்சங்கத்தினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.





















