முதலிடம் பிடித்த தஞ்சாவூர்... எதில் தெரியுமா..?
சிட்டி 2.0வில் தஞ்சை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி பகுதியில் சீரமைக்கப்பட்ட 40 பூங்காக்களை அழகுபடுத்தி சேவை நோக்கோடு பராமரிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும். சிட்டி 2.0வில் தஞ்சை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் சிட்டி 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் பூங்காக்களை அழகுபடுத்தி பராமரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது: தஞ்சை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 200 பூங்காக்கள் உள்ளன. இதில் புனரமைக்கப்பட்ட 40 பூங்காக்களை, அழகுப்படுத்தி, தொடர்ந்து பராமரிக்க பொதுநல நோக்கோடு செயல்படும் அமைப்புகள் முன்வரவேண்டும். கட்டணம் வசூலிக்காமல், பூங்காக்களை சுத்தப்படுத்தி, அழகுடன் பராமரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு பயன்பெற வேண்டும் என்ற ஒரேநோக்கத்தோடு, இதனை செயல்படுத்த வேண்டும். பூங்காவை பராமரிக்க முன்வருபவர்கள் அந்தபகுதியில் உள்ள நகர்நல சங்கங்களுடன் கலந்து பேசி செய்ய வேண்டும். வசதிகள் செய்து தர வேண்டும் என கோரினால் மாநகராட்சி சார்பில் செய்து தரப்படும். பூங்காக்களை குறிப்பிட்ட நேரத்தில் திறந்து, மூடும் பணிகளை நீங்களே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி பேசுகையில், மாநகராட்சி இடம் அசுத்தமாக இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பஸ் நிலையம், பூங்காக்கள் போன்றவற்றை சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.
ஆணையர் கண்ணன் கூறுகையில், குப்பைகளை ஆங்காங்கே கொட்டாதீர்கள். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தவடியே செலுத்தலாம் என்றார்.
பின்னர் கூட்டத்தில் பஙகேற்றவர்களை, மாநகராட்சி அலுவலக வளாகத்தின் மேல்தளத்தின் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை பணிகள் மேற்கொள்ளப்படும் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று பணிகள் குறித்து எடுத்துக்கூறினர்.
இதில் செயற்பொறியாளர் சேர்மக்கனி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், ரோட்டரி, அரிமா சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கத்தினர், சேவை அமைப்புகள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: மக்களோடு நேரடி தொடர்பு இருக்கவேண்டிய ஒரு தருவாயில் தஞ்சாவூர் மாநகராட்சி உள்ளது. இருக்கிறோம். மழை அளவு குறித்து டோல்ஃப்ரீ நம்பர் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய மாநகராட்சி தொடர்ந்து வரக்கூடிய அனைத்து புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆணையர், துணை மேயர், அதிகாரிகள் அனைவரும் கலந்து பேசி பணிகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறோம். சேவை சங்கள், வணிக அமைப்புகள், தனியார் நிறுவனத்தினரை அழைத்து துரிதமாக நாம் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளோம். இந்த மழை காலங்களில் ஏற்படக்கூடிய இன்னலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கூறி மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வந்து மழை அளவு குறித்தும், அப்போது மக்களை நாம் எப்படியெல்லாம் பாதுகாக்கவேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கம் விதமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்துரையாடி நம்முடைய மக்களை எப்படியெல்லாம் காப்பது என்பது குறித்து பேசியுள்ளோம். மிகச் சிறப்பாக செயல்பட்டு நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தஞ்சை மாநகராட்சி மிகச் சிறந்த நற்பெயரை பெற்றுத் தருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிட்டி 2.0 என்பது 100 நகரங்கள் இடையில் போட்டி நடைபெற்றது. அதில் தஞ்சை மாநகராட்சி கலந்து கொண்டு 75 சிட்டிகள் உள்ளே வந்து வெற்றி பெற்றோம். பின்னர் 50 எண்ணிக்கைக்குள் வெற்றி பெற்று வந்தோம். அதன் பிறகு 25 சிட்டிகளுக்குள் வெற்றி பெற்றோம். இன்று இந்திய அளவில் தமிழ்நாட்டில் நம்முடைய தஞ்சாவூர் மாநகராட்சி முதலிடத்தைப் பிடித்து சிட்டி 2.0வில் ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.135 கோடி அளவுக்கு நிதி பெற இருக்கிறோம். அந்த நிதியை பெற்றால் இன்னும் சிறப்பான பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.