Anjugam Boopathy DMK : ’உள்ளாட்சி தேர்தல் களத்தில் கர்ப்பிணி’ தஞ்சையில் அசராமல் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி..!
’நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என திமுகவினர் சொன்னாலும் கூட, அதையும் மீறி வீடு வீடாக சென்று பரப்புரை செய்து வருகிறார் நிறை மாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதி’
நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடிபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் வேட்பாளர்கள் சுற்றி சுழன்று பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சுயேச்சைகள் என பலரும் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதி. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என திமுகவினர் சொன்னாலும் கூட, அதையும் மீறி வீடு வீடாக சென்று பரப்புரை செய்து வருகிறார் அஞ்சுகம் பூபதி. 2016 சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அஞ்சுகம் பூபதி, 2021 பேரவை தேர்தலில் அஞ்சுகம் பூபதிக்கு வாய்ப்பு தரப்படாத நிலையில், தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது திமுக தலைமை.
மருத்துவரான அஞ்சுகத்தின் தந்தை பூபதி தஞ்சை நகர திமுக பொறுப்பாளராகவும், நகர்மன்ற துணைத் தலைவராகவும் இருந்தவர். இவருக்கு தனது தாயாரின் பெயரான அஞ்சுகம் என்ற பெயரை சூட்டியவர் கலைஞர் கருணாநிதி. தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அஞ்சுகம் பூபதி, 2016ல் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அரசு பணியை ராஜினாமா செய்தார்.
ஆளுங்கட்சியாக திமுக இருப்பதனாலும், இந்த 8 மாத கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளதை சொல்லியும், குடும்பத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அஞ்சுகம் பூபதிக்கு பலமாக இருக்கின்றன. அதேபோல்,, பழகுவதற்கும், அணுகுவதற்கும் எளிமையானவர் என்பதால் அஞ்சுகம் பூபதி, இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்கின்றனர் உடன்பிறப்புகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்