தஞ்சை அருகே இரண்டு லாரி நேருக்கு நேர் மோதல் - 2 பேர் உயிரிழப்பு
பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரியும், சிமெண்ட் லாரியும் நேருக்கு மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் ப.ஆறுமுகம் (45). மினி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர். இவரது லாரியில் அதே பகுதியை சேர்ந்த த.தமிழ்ச்செல்வன் (50) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு, ஆறுமுகமும், தமிழ்செல்வனும், தஞ்சாவூரில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில், காய்கறியை இறக்கி விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 11:30 மணிக்கு கண்டியூர் அருகே வளைவில் திரும்பும் போது, அரியலுாரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆறுமுகத்தின் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மினி லாரி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறுமுகம், தமிழ்செல்வன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிணெ்ட் லாரி டிவைரான புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த சுதாகர் (42) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், திருவையாறு - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் லாரிகள் மிக வேகமாக செல்கின்றன. இதேபோல் அரியலுார் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி திருவையாறு பகுதிகளில் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. மேலும் பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இப்பகுதியில் செல்லும் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் பிரகாசமாக விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு வெகு வேகமாக செல்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் அதிக ஒளியால் தடுமாறி சாலையோரத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே இவ்வாறு வேகமாக வரும் லாரிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சிமெண்ட் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கிறோம். போலீசார் இல்லாத நேரத்தில் மிக வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் செயலாக மாறி விடுகிறது. பலமுறை தெரிவித்தும் இவ்வாறே செய்கின்றனர். வேகத்தை குறைக்க பேரிகார்டு வைத்தாலும் பல நேரங்கில் அதையும் இடித்து தள்ளிவிட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.