மதுபானம் வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொலை-மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடித்த நண்பன் கைது
ஆட்கள் நடமாட்டம் உள்ள போது அன்பு கை, கால்களை அசைத்தபடி நான் ஒரு பைத்தியம், நான் ஒரு பைத்தியம் என புலம்பியபடியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது சாதாரணமாக எப்பவும் போல் தனது மனைவியிடம் பேசியுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், பாடியநல்லுாரை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வெங்கடேசன் (35), இவர் ஜீவி ஆர்கானிக் எனும் இயற்கை விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது கம்பெனி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டம் கும்பகோணத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெங்கடேஷ், விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி தாலுக்கா, முடத்துாரை சேர்ந்த விஜயன் மகன் தாண்டிபன் (42), துாத்துகுடி மாவட்டம், எட்டயபுரம், செம்பூரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜாராம் (31), பூனே மாநிலம், சிங்கையில் ரோட்டை சேர்ந்த பிரபாகர் மகன் ரவிக்கிரண் (42) மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இவர்கள் கம்பெனியின் விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் கம்பெனியின் விற்பனையாளர்களில் ஒருவரான கும்பகோணம் அடுத்த ஆடுதுறை, மேல்மருத்துவத்துகுடியை சேர்ந்த அன்பு(40), என்பவருடன் சேர்ந்து 23 ந்தேதி இரவு தனியார் ஏசி பாரில் மது அருந்தியுள்ளனர். பின்னர் அன்பு, மண்டல அதிகாரியான வெங்கடேனுடன் வெளியில் சென்று வருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் உடன் வந்த மற்ற அனைவரும் மீண்டும் தங்கள் தங்கும் விடுதிக்கு சென்று விட்டனர். இந்நிலையில், வெங்கடேசன், கும்பகோணம் அருகே மனஞ்சேரி காவிரி ஆற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ஆற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து வெங்கடேஸ்வரன் கடைசியாக இருந்த, ஆடுதுறையை அடுத்த மருத்துவகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரை போலீசார் தேடி சென்ற போது அவருக்கு மனநிலை சரியில்லை என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கு இருந்த மனநல மருத்துவரிடம் மனநிலை சரியில்லாமல் சேர்ந்துள்ள அன்பு உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பதை பரிசோதனை செய்து தெரிவிக்குமாறு கூறியிருந்தனர். அதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரண்டு போலீசாரை மாறுவேடத்தில் அன்புடன் செயல்பாடுகளை மருத்துவமனையில் கண்காணிக்கும்படி கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் இரண்டு போலீசார் கடந்த மூன்று நாட்களாக 24 மணி நேரமும் அன்புவின் செயல்பாடுகளை இரவு பகலாக கண்காணித்தனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் உள்ள போது அன்பு கை, கால்களை அசைத்தபடி நான் ஒரு பைத்தியம், நான் ஒரு பைத்தியம் என புலம்பியபடியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது சாதாரணமாக எப்பவும் போல் தனது மனைவியிடம் பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் பைத்தியம் போல் நடிப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். மேலும் அன்புவை பரிசோதனை செய்த தஞ்சை மருத்துவ கல்லூரி மனநல மருத்துவர்களும் அவர் பைத்தியம் இல்லை என உறுதியாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அன்புவை கும்பகோணம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், புனே மாநிலத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனத்திலிருந்து, அன்பு, சுமார் 16 லட்சத்திற்கு மேல், விற்பனை செய்வதற்காக பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் அன்பு, பொருட்களுக்கான பணத்தை செலுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி, அந்த நிறுவனத்திலிருந்துவந்த 5 பேர், அன்புவிடம் பணத்தை செலுத்த கூறினார்கள். அப்போது வெங்கடேசன், பணத்தை செலுத்தாவிட்டால், கொடுத்த பொருட்களை திருப்பி எடுத்து செல்வோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அன்பு, வெங்கடேசனை, அழைத்து மதுபானம் வாங்கி கொடுத்து, கத்தி போலுள்ள கூர்மையான தகடால், கழுத்தை அறுத்து, ஆற்றில் வீசியுள்ளார். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மன நிலை பாதித்தவர் போல் நடித்துள்ளார். மேலும், அன்பும், வெங்கடேசனும் ஒரு சமூதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், குடும்பம் உறவினர் போல் பழகி வந்துள்ளார். அதனால் அன்பு அழைத்தவுடன், வெங்கடேசன், நம்பி சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் அன்பு மட்டும் செய்தாரா அல்லது வேறு நபர்கள் உடந்தையாக இருந்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.