13 வயது சிறுமிக்கு எலும்பு புற்றுநோய் - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த தஞ்சை அரசு மருத்துவமனை
13 வயது சிறுமிக்கு காலில் ஏற்பட்ட எலும்பு புற்றுநோய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை: மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பெருமிதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு காலில் ஏற்பட்ட எலும்பு புற்றுநோய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் தற்போது சிறுமி நலமுடன் உள்ளார் என்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ”திருவாரூர் மாவட்டம், கோவிந்தகுடியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது கால் எலும்பில் ஏற்பட்ட புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மிகுந்த சிரமமும், வேதனையும் அடைந்து வந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சை பெறுவதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் உள் நோயாளியாகச் சேர்த்தனர்.
இவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ச. மாரிமுத்து, உதவிப் பேராசிரியர்கள் ப. முனியசாமி, க. பாரதிராஜா அடங்கிய குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதற்கு முன்பு இந்த மாதிரியான அறுவை சிகிச்சையில் காலை அகற்றுவதே முறையாக இருந்தது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையின்போது காலில் உள்ள புற்றுநோய் எலும்பு மட்டும் முழுவதுமாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நவீன செயற்கை மூட்டு பொருத்தப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளார். மருத்துவக்குழுவினர் இந்த சாதனை வெகுவாக பாராட்டுக்கு உரியது.
இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ. 5 லட்சம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு சேவையில் சிறந்து விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயனடைந்து வருகின்றனர். இதில், நாள்தோறும் 40ல் இருந்து 55 எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 20 முதல் 25 வரையில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பார்க்கப்பட்டு, கர்ப்பிணி பெண்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அளவில் இந்த மருத்துவமனை பிரசவம் மற்றும் சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பார்ப்பதில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் லக்சயா என்கிற திட்டத்தின் மூலம் இந்த மருத்துவமனைக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம் மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர்.