வறுமை என்ற காரிருளை திறமை என்னும் ஒளியால் விரட்டி சாதிக்கும் தஞ்சை மாணவர்..!
மொத்தமாக 4 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம், பத்து வெண்கல பதக்கம் என்று தன் பதக்க வேட்டையை அடுக்கிக் கொண்டே செல்கிறார். லம்பத்திலும் சக்கைப்போடு போடுகிறார் மாணவர் தமிழ்ச்செல்வன்.
வறுமை என்ற காரிருள் சூழ்ந்து நின்ற போதும் திறமையை துணைக் கொண்டு கற்ற பயிற்சியை மனதில் கொண்டு சாதனை என்ற மலையில் துயரம் சூழ்ந்த போதும் தளராது ஏறி வெற்றிக் கொடிக் கட்டி பதக்கங்களை பெற்று பெற்றவர்களுக்கும், கற்றுக் கொடுத்தவர்களுக்கும் புகழையும், பெருமையையும் சேர்த்து வருகிறார் தஞ்சை பள்ளி மாணவர்.
வறுமையின் நிறம் கருப்பு என்பார்கள். ஆனால் அதிலும் செம்மையாக, கல்வியே தன் செல்வமாக, பயிற்சியையே வளமாக மாற்றி தனது சாதனைகளின் பட்டியலை நீளமாக்கிக் கொண்ட மாணவர் கராத்தேவில் 12 வயதிலேயே கருப்பு பெல்ட் வாங்கி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வெற்றி கனிகளை பறித்துள்ளார். தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் தமிழ்ச்செல்வன் (16). இவரது சொந்த ஊர் தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம். இந்த மாணவரின் தந்தை மூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது தாயார் சித்ரா. தம்பி ஒருவர், தங்கை ஒருவர். தந்தைக்கு வேலை கிடைத்தால் அடுப்பெரியும். உலை கொதிக்கும்.
இப்படிப்பட்ட வறுமையிலும் தனது அயராத முயற்சிகளாலும், பயிற்சிகளாலும் மாவட்ட போட்டி முதல் தேசிய போட்டிகளில் வரை பலவற்றிலும் கலந்துகொண்டு கராத்தேவில் 12 வயதிலேயே பிளாக் பெல்ட் பெற்று சாதனைப் படைத்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள டியூசனுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ பைக்கில், ஆட்டோ கொண்டு விட்டு மீண்டும் அழைத்துச் செல்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் தன் வீட்டிலிருந்து பயிற்சி வகுப்பு எங்கு நடந்தாலும் அந்த பகுதிவரை நடந்தே சென்று தனது முயற்சிகளால் வெற்றிகளை குவித்து வருகிறார் தமிழ்ச்செல்வன். சைக்கிள் கூட இல்லாமல் நடந்தே வந்து கராத்தேவில் பயிற்சி பெற்று மாவட்ட போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரண்டு வெண்கல பதக்கங்களும், மாநில கராத்தே போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களும், ஒரு வெண்கல பதக்கமும், தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு தங்கம், 5 வெண்கல பதக்கங்களும் குவித்து சாதித்துள்ளார்.
கோவையில் ஹயாஷிகா சங்கம் சார்பில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்கள் குவித்துள்ளார். மொத்தமாக 4 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம், பத்து வெண்கல பதக்கம் என்று தன் பதக்க வேட்டையை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இது ஒரு புறம் என்றால் தமிழர்களின் வீரக்கலையாம் சிலம்பத்திலும் சக்கைப்போடு போடுகிறார் மாணவர் தமிழ்ச்செல்வன். இதுவரை நடந்துள்ள மாவட்ட சிலம்ப போட்டியில் ஐந்து முறை தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும், இரண்டு வெண்கல பதக்கங்களும், மாநில சிலம்ப போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களும் பெற்று தன்னை சுற்றியிருக்கும் வறுமை என்ற காரிருளை பதக்கங்களின் ஒளியால் மாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் எடுக்க, எடுக்க, அடுக்க முடியாத படி வந்து கொண்டே இருக்கிறது சான்றிதழ்களின் எண்ணிக்கை. ஒன்றல்ல, இரண்டல்ல... அத்தனை சான்றிதழ்களையும் எண்ணி முடிக்கவே பல நிமிடங்கள் ஆகும் போல... நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு பக்கபலமாக கராத்தே மற்றும் சிலம்பத்தை செம்மையாக கற்று தந்து முன்னேற்றப் பாதையில் கரம் பிடித்து அழைத்து சென்று கொண்டிருக்கிறார் சிலம்பம் தஞ்சாவூர் மாவட்ட சங்கசெயலாளர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் ராஜேஷ் கண்ணா.
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்தாலும் பயிற்சிக்கும் சரி, போட்டிகளில் பங்கேற்கவும் சரி உதவிகள் பல புரிந்து வருகிறார். மடியில் பசியிருந்தாலும் மலர்ந்த முகத்துடன் தங்களின் மகன் சாதனை திருமகனாக முன்னேறுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் தமிழ்ச்செல்வனின் பெற்றோர். வயிற்றில் பசி இருந்தாலும், வறுமையை உழைப்பு என்ற உளிக் கொண்டு உடைத்தெறிந்து வெற்றிச்சிகரத்தை நோக்கி பதக்கங்கள், சான்றிதழ்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறி வருகிறார் மாணவர் தமிழ்ச்செல்வன்.