தஞ்சாவூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 232 பேருக்கு ரூ.1.86 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் ஆதிதிராவிடர்களாக உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 232 பேருக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிகளின் எண்ணிக்கை.
கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், அடிப்படை வசதி, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம், மயானம் மற்றும் மயானப்பாதை வசதி திட்டம், சமத்துவ மயானம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட பணிகள், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், நீதிமன்ற வழக்குகள் விவரம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், வங்கியில் கடன் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், வங்கியில் முன்புழிவு பெறாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், நிதியாண்டில் பொருளாதாரம் மேம்பாட்டத்தின் கீழ் இலக்கு மற்றும் சாதனைகள், தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்டத்தில ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் ஆதிதிராவிடர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்க்கைத் தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையில்லாமல் சென்றடையும் வகையில் அதிகாரிகள் முனைப்புகள் செயல்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.லெட்சுமிபிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் டிராக்டர்கள், பயணிகள் ஆட்டோ, சுற்றுலா வாகனங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தையற் இயந்திரங்கள், வங்கி கடனுதவிகள், வீட்டுமனை பட்டாக்கள் என 232 பேருக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.