குடிநீரில் சுவை மாறவில்லை; யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 85,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
வாடிக்கையாளர் கேட்ட நிறுவனத்தின் தயாரிப்பு அல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தின் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அவரது வீட்டில் பொருத்தியுள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டில் உள்ள குடிநீரில் சுவையானது மாறவில்லை
சென்னையை சேர்ந்த இந்தியாவின் முன்னணி நிறுவனமான யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 85,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த முத்து என்பவர் ராமாபுரத்தை சேர்ந்த யுரேகா ஃபோர்ப்டு நிறுவனத்தில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு 13,500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடிக்கையாளர் கேட்ட நிறுவனத்தின் தயாரிப்பு அல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தின் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அவரது வீட்டில் பொருத்தியுள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டில் உள்ள குடிநீரில் சுவையானது மாறவில்லை என்று கூறி தியாகராய நகரில் உள்ள யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் பிரிவிற்கு புகார் அளித்துள்ளார். அவர்கள் மெக்கானிக்கை அனுப்பி இயந்திரத்தை பரிசோதித்து உள்ளனர். இருப்பினும் அந்த இயந்திரம் அவரது வீட்டில் உள்ள குடிநீரில் சுவையை மாற்றித் தரவில்லை.
இதுகுறித்து முத்து யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தின் சர்வீஸ் மேனேஜர் மற்றும் நிறுவன மேலாளர் ஆகியோருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அவர்கள் உடனடியாக அந்த இயந்திரத்தை மாற்றித் தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் அதன்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக முத்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு வாடிக்கையாளருக்கு பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்கு 25 ஆயிரம் ரூபாயும், மன உளைச்சல் மற்றும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக 50000 ரூபாயும், மேலும் அந்த இயந்திரத்தை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் கேட்ட நிறுவனத்தின் இயந்திரத்தை வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவிற்காக பத்தாயிரம் ரூபாயும் உத்தரவு பிறப்பித்த ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 9 வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தமிழக முழுவதும் பல நூறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக அந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் வழக்குகளை மற்ற மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் தொடரப்பட்ட இந்த வழக்கிற்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைவீர் ஆணையத்தில் பல்வேறு வழக்குகளுக்கு கடந்த சில மாதங்களாக அதிரடி தீர்ப்பு என்பது நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஏராளமான பொதுமக்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கி பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தாமாகவே முன்வந்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்