தஞ்சை: நீதிமன்ற உத்தரவை மீறி வெண்ணாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அவதி
’’நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவதால், வேறு யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் மக்கள் குழப்பம்’’
தஞ்சை வெண்ணாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவலம்
மூன்று மாவட்ட மக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வெண்ணாற்றில் கொட்டப்படும் கழிவுகள்
யாரிடம் புகாரளிப்பது என்று தெரியாமல் இருக்கும் பொது மக்கள்
தஞ்சை மாவட்டம் கல்லணையில் வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர் , நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் துாரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது. மேட்டூரில் உள்ள, காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வந்தால், அந்த தண்ணீரை, காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் பெரும்பாலும் திறந்து விடுவார்கள்.
தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்கிரஹாரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குறுகிய பாலமாக இருந்ததால், அதனை உயர்மட்ட பாலாமாக கட்டினர். இந்நிலையில், வெண்ணாற்று பாலத்தின் கீழ், அருகிலுள்ள மீன், கோழி மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டியுள்ள கழிவுகளில் புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. இது போன்ற அவல நிலையால், பொது மக்கள், ஆற்றில் நீராட முடியாமலும், பல்வேறு பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்க முடியாமல் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறையினரிடம் புகாரளித்தும், அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று வருகின்றார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக பள்ளியக்கிரஹாரம் வெண்ணாற்றில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும், மேலும் இது போன்ற கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், வெண்ணாற்றில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர், தினந்தோறும் நீராட சென்று வருவார்கள். ஒரு காலத்தில் வெண்ணாற்றில் ஆற்றில் ஊற்று எடுத்து, தண்ணீரை பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில், ஆற்றில் கோரைகள், செடி, கொடிகள் மண்டியதால், அப்பழக்கத்தை விட்டு விட்டனர்.
இந்நிலையில் பாலத்தின் கீழ், மீன், கோழி மற்றும் உணவு கழிவுகளை கொட்டி வருவதால், அதில் புழுக்கள், கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதிக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்தவர், மதுரை உயர்நீதிமன்றத்தில், வெண்ணாற்றில் கழிவுகளை கொட்டக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் தீர்ப்பில், வெண்ணாற்றில் கழிவுகளை கொட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் உத்தரவையும் மீறி, தற்போது கழிவுகளை கொட்டப்பட்டு வருகின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவதால், வேறு யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் உள்ளோம். தமிழக அரசு நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், நீர் நிலை துறைக்கு அமைச்சரை நியமித்தது. ஆனால் மூன்று மாவட்டங்களுக்கு பயன்படும் வெண்ணாற்றில், கழிவுகள் கொட்டப்படுவது வேதனையை அளிக்கின்றது என்றார்.