ஒரு நாளாகியும் ஓயாத தஞ்சை மேயர் நிகழ்ச்சி நிரல்! 'நெஞ்சுக்கு நீதி' ஷோவால் இணையத்தில் வைரல்!
இது எப்படி நடந்தது. மேயருக்கு தெரிந்து நடந்ததா அல்லது வழக்கம் போல் அட்மின் பிரச்சினையா என்பதை சொல்ல போவது யார்?
என்னங்க இது சினிமா பார்ப்பதை கூட தனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்து அதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் தஞ்சை மாநகராட்சி மேயர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சினிமா பார்ப்பது தப்பாய்யா என்ற கேள்வி எழலாம். ஆனால் அதை நிகழ்ச்சி நிரலில் சேர்த்ததுதான் கேள்வி கேட்க வைத்து விட்டது. பொதுவாக ஒரு வைரல் என்றால் ஒரு நாளில் அடங்கிவிடும், ஆனால் தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரல் ஒரு நாளைக் கடந்தும் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டுகளில். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40 உறுப்பினர்களையும், அதிமுக 7 வார்டு உறுப்பினர்களையும், பாஜகவும், அமமுக தலா ஒரு வார்டையும், சுயேட்சை இரண்டு வார்டுகளையும் தங்கள் வசப்படுத்தினர். இதில் திமுக அமோக வெற்றிப் பெற்றது.
பின்னர் தஞ்சை மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும், மறைமுக தேர்தல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் தேர்தலை புறக்கணிக்க மீதம் 50 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் திமுக மேயர் வேட்பாளர் சண்.இராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துணை மேயர் மணிகண்டன் 11 வாக்குககள் பெற்று தோல்வியுற்றார். இதன் மூலம் தஞ்சை மாநகராட்சியின் திமுக முதல் மேயராக சண்.ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற நாள் முதல் அதிரடிதான். தினம் ஒரு வார்டு, மக்கள் குறைகேட்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலை பராமரிப்பு பணிகள் என்று சுற்றி சுழன்று வருகிறார். இதற்கிடையில் மாநகராட்சி முதல் கூட்டமும் நடத்தப்பட்டது. அனைத்தும் திறம்பட செய்து வரும் மேயர் சண்.ராமநாதன், அனைத்து விழாக்களிலும் பங்கேற்கிறார். பல அதிரடி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இப்படி தன் பணிகளில் மும்முரம் காட்டும் மேயரின் முக்கியமான பணி தினம் ஒரு வார்டு என்று விசிட் அடித்து பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்பதுதான்.
சரிங்க... மேயர் எந்தெந்த வார்டுக்கு செல்கிறார். எப்போது என்று தெரிந்து கொள்ளும் விதமாக பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்ள விசிட் அடிக்கும் நிகழ்ச்சி நிரல் விபரங்களை வெளியிடுவது வாடிக்கை. சரிங்க மேயர் வார்டுக்கு போகிறார், பொதுமக்களை சந்திக்கிறார், அதிகாரிகளை சந்திக்கிறார். சார்ட் போட்டு சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார் இதெல்லாம் சரிதான். இன்றைய நிகழ்ச்சிநிரல் விபரத்தை வெளியிட்டார் பாருங்கள். இதுதான் அனைத்து தரப்பினருக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்படி என்னப்பா அதில் இருக்கு என்கிறீர்களா. எம்எல்ஏவும், கட்சி தலைவரின் மகனும், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முதத்துடன் உலா வரும் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இதை பார்க்க செல்வதையும்தான் நிகழ்ச்சி நிரலில் ஏற்றியிருந்தார் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன். இதுதான் அனைத்து தரப்பினரையும் கேள்வி கேட்க செய்துள்ளது. என்னப்பா... இப்படி செஞ்சுட்டீங்களேப்பா என்கின்றனர் பொதுமக்கள். உங்கள் கட்சி எம்எல்ஏ நடித்துள்ள படம்தான் அதற்காக அதை பார்க்க செல்வதை கூட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம். உங்கள் கட்சி தலைவர் மகன் படம் என்பதற்காக இப்படியா என்று குட்டு வைக்காத குறையாக கேட்கின்றனர் மக்கள். இது எப்படி நடந்தது. மேயருக்கு தெரிந்து நடந்ததா அல்லது வழக்கம் போல் அட்மின் பிரச்சினையா என்பதை சொல்ல போவது யார்?.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்