பாபநாசத்தில் தரமற்ற பொருட்களை தருவதாக கூறி பெண்கள் சாலை மறியல்...!
’’ரேசன் கடைகளில் அரிசி, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை தரமானதாக வழங்குவதில்லை. இதே போல் தேவையான பொருட்கள் வழங்காமல் பொருட்கள் இல்லை என திருப்பி அனுப்பி விடுகிறார்கள்’’
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள திருவையாத்தங்குடி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் ஏழை மக்களும், கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரேசன் கடைகளில் வழங்கும் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரேசன் பொருட்களை முறையாக வழங்குவதில்லை. பொருட்களும் தரமற்ற வகையில் வழங்கியதால், அக்கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தனர்.
ஆனால் ஏழை விவசாயிகளை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் அலட்சியப்போக்கில் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக ரேசன் கார்டுக்குரிய பொருட்களை வழங்காமலும், ரேசன் கார்டுக்குரிய அரிசி, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்களை வழங்காமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து ரேசன் கடை ஊழியரிடம் கேட்ட போது, மாவட்ட நிர்வாகம் ரேசன் கார்டுக்குரிய பொருட்களை வழங்குவதில்லை. தாமதமாக வழங்குவதால், நாங்கள் உங்களுக்கு தாமதமாக வழங்குகின்றோம் என்று பதில் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொது மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் பலனில்லாததால், பாபநாசம்-திருக்கருகாவூர் சாலை திருவையாத்தங்குடி கிராம சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர், பாபநாசம் காவல்துறை, வட்ட வழங்கல் துறையினர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், ரேசன் கார்டுக்குரிய பொருட்களை முறையாகவும், தரமாகவும் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
பின்னர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து, உரிய முறையில் அனைவருக்கும் ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், திருவையாத்தங்குடியில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை தரமானதாக வழங்குவதில்லை. இதே போல் ரேசன் கார்டுகளுக்கு தேவையான பொருட்கள் வழங்காமல், குறைந்த ரேசன் கார்டுகளுக்கு மட்டும் பொருட்களை வழங்கி விட்டு, மீதமுள்ள ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் இல்லை என திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
இதனால் அவர்கள், தனியார் கடைகளிலுக்கு சென்று அதிகவிலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தால், எந்த விதமான பதிலும் கூறாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இது போன்ற பிரச்சனையால் பெண்களாகிய நாங்கள் தான் வீட்டில் சிரமப்படவேண்டிய கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கு உரியபொருட்களையும், தரமான பொருட்களை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் நேரில் வந்து பதில் கூறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.