ஒரே நம்பரில் பல லாரிகள்... மணல் குவாரி நூதன மோசடி... ‛களம் கண்ட வேங்கை’யால் அம்பலம்!
‛களம் கண்ட வேங்கை’ என்று பெயர் எழுதப்பட்ட லாரி வந்து இருக்கு. போலீசார் அந்த லாரியில் ஏதோ வித்தியாசமாக இருக்கே என்று நிறுத்தி சோதனை செய்து இருக்காங்க, அப்போ தான்...
சினிமாப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். வில்லன் காருக்கு பல நம்பர் பிளேட் வைத்து கடத்தல் பொருளை கைமாற்றுவார். போலீசை ஏமாற்றுவார். இப்போ அந்த கதை மணல் மோசடிக்கு பயன்படுத்தி இருக்காங்க. அதுவும் காவிரி டெல்டாவில். அப்போ நம்பர் பிளேட். இப்போ டெக்னாலஜி டெவலப்மெண்ட்டால் ஸ்டிக்கர். அவ்வளவுதான் வித்தியாசம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வடுகக்குடி மணல் குவாரியில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்ன சம்பவம்னா... லாரி பதிவு எண் மீது போலியான எண்ணை ஸ்டிக்கரில் பிரிண்ட் செய்து ஒட்டி மோசடியாக மணல் எடுத்து சென்றுள்ளனர். கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி எத்தனை யூனிட் எடுக்கப்பட்டது என்று தெரியலையே என்கின்றனர் பொதுமக்கள்.
தஞ்சை மாவட்டம் வடுககுடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பதிவு செய்யப்பட்ட லாரிகள் மட்டும் மணல் ஏற்றிச் செல்ல முடியும். இதில்தான் செம தில்லுமுல்லு வேலை நடந்துள்ளது. அனுமதி வழங்கிய லாரியின் நம்பர்தான்யா முக்கியம். லாரி இல்லையே என்று ரூம் போட்டு யோசிச்சு இருப்பாங்க போலிருக்கு. ஒரிஜினல் எண் மீது போலியான பதிவு எண்களை ஒட்டி மோசடியாக மணல் எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருந்து இருக்காங்க.
என்ன இது... இப்பதான் இந்த நம்பர்ல ஒரு லாரி போனுசுச்சு இப்ப அதே நம்பரில் இன்னொரு லாரியா என்று மக்கள் கவனிச்சு போலீசுக்கு புகாரை தட்டி விட முழித்துக் கொண்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கினாங்க. அப்போதான் வெளியாகி இருக்கு தில்லுமுல்லு வேலை.
‛களம் கண்ட வேங்கை’ என்று பெயர் எழுதப்பட்ட லாரி வந்து இருக்கு. போலீசார் அந்த லாரியில் ஏதோ வித்தியாசமாக இருக்கே என்று நிப்பாட்டி சோதனை செய்து இருக்காங்க. அப்பதான் நம்பர் பிளேட்டில் செய்ய தில்லாலங்கடி வேலை தெரிய வந்து இருக்கு. முன்புறம் TN 30 AX 2299 என்ற எண்ணும் பின்புறம் TN 52 E 4458 என்ற எண்ணும் ஒட்டி இருந்து இருக்கு. போலீசாரின் அதிரடி சோதனையில் TN 52 E 4458 என்ற எண் உண்மையானது. அதுக்கு மேல போலியாக நம்பர் அச்சடித்து ஸ்டிக்கரில் ஒட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பாடா ஒரு லாரிதான் என்று போலீசார் பெரு மூச்சு விட... எங்களை அப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்று பெயர் எழுதப்பட்ட லாரியின் முன்புறம் TN 39 B 4899 என்ற எண்ணும் பின்புறம் TN 19 A 6369 என்ற எண்ணும் ஒட்டப்பட்டு வர... யோவ் யாருங்கய்யா நீங்க எல்லாம். இத்தனை நாளா இதை எப்படி மணல் குவாரியில் கண்டுக்கலை என்று கேள்வியுடன் அந்த லாரியை பரிசோதனை செய்ய TN 19 A 6369 என்ற எண் உண்மையானது என தெரியவந்தது. இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து மருவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துட்டாங்க.
தொடர்ந்து வடுககுடி அரசு மணல் கிடங்கு கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.