தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை கண்காட்சி நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை கண்காட்சி நடந்தது. இதை பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தும் விதமாகவும் மாதத்தின் முதல் திங்கட்கிழமை ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்ய மகளிர் திட்டம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர் கூட்டத்தின் போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
20க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைப்பு
ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையின் போது இவ்வாறு மகளிர் குழுக்களில் தயாரிக்கும் பொருட்களை அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 8 முதல் 10 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் மகளிர் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் தயாரித்த ஹெல்த் மிக்ஸ், ஒயர் கூடை, கீ செயின்கள், தோடு, பொட்டு, மசாலா பொருட்கள், நெல்லிக்காய் பொடி, சணல் பைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மகளிர் குழுக்களின் வருவாயை உயர்த்த நடவடிக்கை
இது குறித்து மகளிர் திட்ட மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்துவது மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்காக மாதத்தின் முதல் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடக்கும் நாளில் வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தரமான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி பயன்பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் குழுக்களின் வருவாய் உயரும். மேலும் அவர்களுக்கு உற்பத்தி பொருட்கள் குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ள இது ஏதுவாக உள்ளது.
கடந்த மாதத்தை விட தற்போது ஸ்டால்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.