(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முழுமையான பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதி
கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் போலீசார் அவர்களுக்கு என்ன காரணத்திற்காக சோதனைகள் நடக்கிறது என்பதை தெரிவித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை ஒட்டி வாசலிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அனைத்து தரப்பினரையும் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வருகிறது. இங்கு தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்து தீர்வு பெற்று வருகின்றனர். மனு கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர், தங்களின் பிரச்னையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்காக மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் வந்து அதிகாரிகள் முன்னிலையில் தன் மீது ஊற்றி கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக தண்ணீர் பாட்டில்களை கூட்ட அறைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தீயணைப்பு வீரர்களும் கூட்ட அறை முன்பு தயார் நிலையில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் ஒரு சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் டிமிக்கி கொடுத்து விட்டு உள்ளே நுழைந்து விடுகின்றனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில், இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
இதற்காக காலை முதல் ஏடிஎஸ்பி முத்தமிழ்செல்வன் மேற்பார்வையில், வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சிசாரா உட்பட ஏராளமாக போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களின் பைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்களில் உள்ளது தண்ணீர்தானா என்பதும் குறித்து போலீசார் பரிசோதித்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டு முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.
போலீசாரின் இந்த பரிசோதனை நடவடிக்கைக்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் தப்ப வில்லை. அவர்களின் அடையாள அட்டையை வாங்கி பார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் போலீசார் அவர்களுக்கு என்ன காரணத்திற்காக சோதனைகள் நடக்கிறது என்பதை தெரிவித்தனர். இவ்வாறு பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கலெக்டர் அலுவலக முகப்பு பகுதி, மாவட்ட காவல் அலுவலகம் செல்லும் பகுதி என மக்கள் எவ்விதத்திலும் மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் உள்ளே வராமல் தடுக்க தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. பொதுமக்கள் தங்களின் மனுக்கள் மீது உடனே தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மண்எண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றை எடுத்து வந்து அதிகாரிகள் முன்பு ஊற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தனர்.